Published : 18 Jul 2015 10:39 AM
Last Updated : 18 Jul 2015 10:39 AM

உலக மசாலா: நத்தை நண்பன்!

இந்தோனேசியாவில் வசிக்கிறார் 34 வயது புகைப்படக்காரர் குரிட் அஃஷீன். ஜாவாவில் ஒரு மரக்கிளையில் வித்தியாசமான காட்சியைக் கண்டார். நத்தை மீது ஒரு தவளை மெதுவாக ஏறிக்கொண்டிருந்தது. மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த நத்தையால் எளிதாக நகர இயலவில்லை.

ஆனாலும் தன் முயற்சியைக் கைவிடாமல் தவளையைச் சுமந்துகொண்டு நகர்ந்தது. தவளை ஜாலியாக நத்தையின் ஓட்டில் அமர்ந்திருந்தது. ஒருகட்டத்தில் நத்தையால் நகர முடியவில்லை. வேறு வழியின்றி தவளை, நத்தையை விட்டுச் சென்றுவிட்டது. ஒவ்வொரு நொடியையும் அழகாகப் புகைப்படமெடுத்துவிட்டார் குரிட்.

அட்டகாசம்!

நேபாளத்தைச் சேர்ந்த புஷ்கர் ஒரு நிமிடத்தில் 134 தடவை தன் கால்களால் தலையை அடித்து, உலக சாதனை நிகழ்த்தியிருக்கிறார். கடந்த 8 மாதங்களாகக் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு, நுணுக்கங்களைப் புரிந்துகொண்டு இந்த வெற்றியை ஈட்டியிருக்கிறார். பாதி உடலை 90 டிகிரிக்கு வளைத்து, இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி தலையில் அடித்தார். கடந்த 2013ம் ஆண்டு ஒரு நிமிடத்தில் 127 முறை அடித்திருந்தார்.

இந்த தடவை 134 தடவை அடித்து, அவரது சாதனையை அவரே முறியடித்திருக்கிறார். ‘’இந்தச் சமூகத்தில் வாழும் ஏழை மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன். நான் பல நாடுகளுக்கும் செல்லும்போது பல்வேறு விதமான மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. என் சாதனைகள் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளை, ஏழைகளுக்குச் செலவிட முடிவு செய்திருக்கிறேன்’’ என்கிறார் புஷ்கர். தன் வாழ்நாளில் 100 சாதனைகளையாவது செய்துவிட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார் புஷ்கர்.

உங்க சாதனைக்குப் பின்னால நல்ல நோக்கமும் இருக்கு, கலக்குங்க புஷ்கர்!

ஜப்பானில் உள்ள எபினார்ட் நாசு விடுதி அன்று மிகவும் பரபரப்பாக இருந்தது. அங்கே நடந்த திருமணத்தில் அல்பகா என்ற விலங்கு கலந்துகொண்டது. ஒட்டகத்தின் உறவினர் இந்தத் தென்னமெரிக்க விலங்கு. இதுவரை யாரும் அல்பகாவை இதுபோன்ற விசேஷங்களில் கண்டதில்லை என்பதால் எல்லோரும் அதையே பார்த்துக்கொண்டிருந்தனர். அல்பகாவையும் மணமக்களையும் வைத்து விதவிதமாகப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.

எல்லாவற்றையும் பொறுமையோடு செய்துகொண்டிருந்தது அல்பகா. ‘’எங்கள் திருமணம் இவ்வளவு வித்தியாசமாக நடைபெறும் என்று நாங்கள் நினைக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் அல்பகாவை மறக்க மாட்டோம்’’ என்று எழுதி, புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டர் மணமகள். இன்று ஜப்பானிய திருமணத்தில் கட்டாயமாக அல்பகா இடம்பெற வேண்டும் என்ற அளவுக்குச் சென்றுவிட்டது.

அடடா! இனி அல்பகா இல்லாமல் கல்யாணம் கிடையாது போலிருக்கே!

கிழக்கு லண்டனில் உள்ள சலூனில் வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான ஜானிவாக்கர் மது வழங்கப்படுகிறது. எலுமிச்சையும் இஞ்சியும் கலந்த மெழுகை மீசையில் தடவி விடுகிறார்கள். ஒவ்வொரு முறை மதுவை அருந்தும்போதும் மீசையில் இருந்து மெழுகு உள்ளே செல்கிறது. வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது என்கிறார்கள்.

இது 100 சதவீதம் தேனீக்களின் மெழுகால் தயாரிக்கப்படுவதால் எந்தவிதக் கெடுதலும் இல்லை. மிளகு, எலுமிச்சை, இஞ்சி என்ற மூன்று சுவைகளில் மெழுகை ஜானிவாக்கர் நிறுவனம் அளித்து வருகிறது. இந்தச் சோதனை முயற்சி வெற்றி பெற்றால் உலகம் முழுவதும் மீசையைத் தம்ளருக்குள் விட்டுக் குடித்துக்கொண்டிருப்பார்கள் மனிதர்கள்.

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க…



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x