

பாதுகாப்பு, ராணுவ ஒத்துழைப்பு உட்பட ஐந்து முக்கிய ஒப்பந்தங் கள் இந்தியா மற்றும் கஜகஸ்தான் இடையே நேற்று கையெழுத்தானது. அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரதமர் மோடி கஜகஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டு அதிபர் நூர்சுல்தான் நஸர்பயேவ் மற்றும் உயர் பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தையில் மோடி பங்கேற்றார்.
அதிபர் நஸர்பயேவ் உடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த மோடி, “பிராந்திய அமைதி, தகவல்பரிமாற்றம், ஒரு மைப்பாடு, ஐ.நா. மறுசீரமைப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோ சனை நடத்தினோம்.
இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேலும் வலிமைப்படுத்த இரு தரப்பும் விரும்புகிறது. பாது காப்பு தளவாட உற்பத்தியிலும் கவனம் செலுத்த விரும்பு கிறோம். இதற்காக புதிய புரிந் துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது” என்றார்.
ராணுவ வீரர்கள் பரஸ்பரம் அவ்வப்போது இரு நாடுகளுக்கும் பயணம் செய்தல், ஆலோசனை நடத்துதல், வீரர்களுக்கு பயிற்சியளித்தல், தொழில்நுட்ப அளவிலான ஒத்துழைப்பு, கூட்டுப் பயிற்சி, சிறப்பப் படை வீரர்களை பரிமாற்றம் செய்தல், ஐ.நா. அமைதிப்படையில் கூட்டு நடவடிக்கை உள்ளிட்டவை தொடர்பாக புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“ஆக்கப்பூர்வ அணுசக்தி பயன்பாட்டுக்காக இந்தியா யுரேனியம் கொள்முதல் ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் சில நாடுகளுள் கஜகஸ்தானும் ஒன்று. மற்ற தாதுக்கள் கொள்முதலிலும் இதனை விரிவுபடுத்த ஆவலாக உள்ளோம்” என மோடி தெரிவித்தார்.
இரு தலைவர்களும் இணைந்து `தேஜ் கடம்’ என்ற பெயரில் கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில், தகவல் பரிமாற்றம் உட்பட அனைத்துக் கோணங்களிலும் பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து போராட இரு நாடுகளும் ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மோடிக்கு அதிபர் மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் நஸர்பயேவின் 75-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார்.
புத்தகங்கள் பரிசளிப்பு
டெல்லி தேசிய அருங்காட்சி யகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் நூல்களில் இருந்து மறு உருவாக்கம் செய்யப்பட்ட குரு கிரந்த சாஹிப் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு, ஜைன மதத்தில் உயர்வாகப் போற்றப்படும் பிராகிருத மொழியில் பத்ரபாபு எழுதிய கல்பசூத்ரா (கி.பி 15-ம் நூற்றாண்டு), சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட புத்த மத நூல் அஷ்டசஹாஷ்ரிகா பிரஞ்ஞபர மிதா (12-ம் நூற்றாண்டு), பெர்சிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட வால்மீகி ராமாயணம் (18-ம் நூற்றாண்டு) உள்ளிட்ட சமய நூல்களை பிரதமர் மோடி, கஜகஸ் தான் அதிபர் நஸர்பயேவுக்கு பரிசளித்தார்.
இப்பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கு கஜகஸ்தான் அளித்து வரும் பங்களிப்பை பாராட்டிய மோடி, சர்வதேச யோகா தினத்தை ஆதரித்து ஐ.நா.வில் வாக்களித்தமைக்காக அந்நாட்டுக்கு நன்றி தெரிவித்தார்.
மோடிக்கு, நஸர்பயே விருந்து அளித்து கவுரவித்தார்.