

மத்திய பிரதேசத்தில் நடந்த வியாபம் ஊழல் தொடர்பாக செய்தி சேகரித்த செய்தியாளார் அக்ஷய் சிங் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நா. அழைப்பு விடுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அதிகாரிகளை விசாரிக்க ஐ.நா. சபை கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக யுனஸ்கோ இயக்குநர் இரினா போகோவா கூறும்போது, "உயிரிழந்த செய்தியாளர் அக்ஷய் சிங்கின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் உடன் பணியாற்றியவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
செய்தியாளர்களுக்கு எதிரான குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டியவை. அதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
2012–ம் ஆண்டு மருத்துவ மாணவி நம்ரதா தமோரின் மர்மச்சாவு, மாநில போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. கொலை வழக்காக மாற்றி பதிவு செய்துள்ளது. வியாபம் ஊழல் விவகாரம் தொடர்பாக செய்தி சேகரித்த டெல்லி தனியார் சேனலின் செய்தியாளர் அக்ஷய் சிங் (38) மர்ம மரணம் அடைந்தார்.
மத்திய பிரதேச அரசியலில் புயலைக் கிளப்பி வரும் வியாபம் ஊழல் தொடர்பான விவகாரத்தில், மர்ம மரணம் அடைந்த மாணவி நம்ருதா தாமோரின் பெற்றோரிடம் பேட்டி எடுத்த அக்ஷய் சிங், அதற்கு பின் 2 நாட்களில் மர்மமான முறையில் இறந்தார்.
மாணவி நம்ரதாவின் பெற்றோர்களிடம் பேட்டி எடுத்தபின்னரே செய்தியாளர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, வியாபம் ஊழல் வழக்கு விசாரணையை சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதுதொடர்பான வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் விசாரணையை சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்தது. இவ்விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.