Last Updated : 21 Jul, 2015 10:16 AM

 

Published : 21 Jul 2015 10:16 AM
Last Updated : 21 Jul 2015 10:16 AM

கிரீடத்தை இழக்கும் கிரீஸ் - 7

கிரேக்கத்தின் தனித்தனி நகரப் பகுதிகள் (இவற்றை City States) என்பார்கள்) நன்கு செழித்து வளர்ந்தன. பலவித ஆட்சி முறைகள் ஆங்காங்கே தோன்றின. அவற்றில் ஜனநாயகமும் உண்டு. அறிவியல், பண்பாடு, நுண்கலைகள் போன்றவை கி.மு.500லேயே அங்கு மலரத் தொடங்கி விட்டன.

கி.மு.546ல், ஆசியாவில் ஆழமாக காலுன்றி இருந்த பாரசீக சாம்ராஜ்யம் கிரீஸின் பெரும் பகுதியை ஆக்கிரமித்தது. தொடங்கின தொடர் யுத்தங்கள். கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு போர்தான்.

இந்த யுத்தம் தொடங்குவதற்கு 50 வருடங்களுக்குமுன் ‘சைரஸ் தி கிரேட்’ என்ற மன்னன் ஆசியா மைனர் பகுதியின் மேற்கில் இருந்த கிரேக்கக் காலனிகளை தன் வசம் ஆக்கினார் (ஆசியா மைனர் என்பது ஒரு தீபகற்பம். இது தற்கால துருக்கி மற்றும் அர்மீனிய உயர்மட்ட நிலங்களையும் கொண்டது). பதிலுக்கு இந்தக் கிரேக்கப் பகுதிகள் அரிஸ்டாகொரஸ் என்ற மன்னனின்கீழ் இணைந்து எதிர்த்தன. ஏதென்ஸ், எரிட்ரியா போன்ற பகுதிகள் பாரசீகப் பகுதியில் தலைநகரான சர்டிஸ் என்பதை எரித்தன. பாரசீக மன்னனாக பிறகு அரியணையில் ஏறிய டரியஸ் தி கிரேட் என்ற மன்னன் இதற்குப் பழிவாங்க சபதம் எடுத்தான்.

இங்கே டரியஸைப் பற்றி சில வார்த்தைகள். சரித்திரத்தில் அழுத்தமான இடம் பெற்ற மன்னன் இவன். இவன் ஈரானின் ஷா ஆன பிறகு பாரசீக சாம்ராஜ்யத்தை இருபது பகுதிகளாகப் பிரித்தான். ஒவ்வொன்றிற்கும் ஓர் ஆளுநரை நியமித்து ஆட்சி செய்தான். தங்க நாணயங்களை அறிமுகப்படுத்தினான். நாட்டுக்குள்ளேயே வணிகம் வளர உதவினான். ஜெருசலேம் நகரில் யூதர்கள் சாலமன் ஆலயத்தை எழுப்புவதற்குக்கூட அனுமதித்தான்.

எப்படியோ போர்கள் தவிர்க்க முடியாதவை ஆகின. கி.மு. 449ல் மேற்படி போர்கள் முடிவுக்கு வந்தாலும், இந்த இரண்டு வித்தியாசமான நாகரிகங்களும் தொடர்ந்து 100 வருடங்களுக்காவது இணையாகவே தொடர்ந்தன.

ஸ்பார்ட்டா என்பது இன்றைய கிரீஸின் ஒரு பகுதி. அதற்கும் ஏதென்சுக்கும் அடிக்கடி உரசல்கள் உண்டாயின. இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது பாரசீகம்.

கிரேக்கத்துக்கும், பாரசீகத்துக்கும் நடைபெற்ற போரில் ஒரு மாபெரும் ஹீரோவாகக் கருதப்பட்டவர் லியோனிடஸ். இவர் ஸ்பார்ட்டா பகுதியின் மன்னர். துணிவுக்கும், தியாகத்துக்கும் பெயர்போன வராக விளங்கியவர். இவர் பல ஓவியர்களால் வரையப்பட்டிருக்கிறார். பல திரைப்படங்கள் இவர் கதையை வைத்து உருவாக்கப்பட்டுள்ளன.

பாரசீக மன்னரான ஜெர்ஜெஸ் கி.மு. 480ல் தனது மாபெரும் ராணுவத்துடன் வடக்கு கிரீஸை தாக்கத் தொடங்கினார். கிரேக்கர்கள் ஒன்றிணைந்து போராட முடிவு செய்தனர்.

மத்திய கிரீஸில் உள்ள ஒரு பகுதி தெர்மோபயிலே. அந்தக் குறுகிய பகுதியை ஸ்பார்ட்டாவின் மன்னன் லியோனிடஸுவும் அவரது 300 ராணுவ வீரர்களும் அடைந்தனர். அங்கு ஏற்கெனவே 4,000 கிரேக்க வீரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் பாரசீக ராணுவ வீர்ர்களின் எண்ணிக்கை 80,000 - கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகம்

தாக்குவதற்கு முன் பாரசீக மன்னன் நான்கு நாட்கள் காத்திருந்தார். எப்படியும் கிரேக்கர்கள் சரணடைந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை. யாரும் வரக்காணோம். அளவுக்கு மீறிய பயம் என நினைத்தார் பாரசீக மன்னர். தன்னுடைய சில பிரதிநிதிகளை அனுப்பினார். ‘‘கிரேக்கர்களின் ஆயுதங் களைப் பெற்று வாருங்கள்’’ என்றார். எந்த எதிர்ப்பும் இருக்காது என்ற நினைப்பு. ஆனால் ஸ்பார்ட்டா மன்னர் லியோனிடஸ் ‘‘நீங்கள் அத்தனைபேருமே வந்து எங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொள்ள முடியுமா என்று முயற்சி செய்து கொள்ளுங்களேன்’’ என்றார். அதாவது போர் முழக்கம்!

தொடக்கத்தில் கிரேக்கப்படை தாக்குதலைத் தொடங்கவில்லை. உள்ளே நுழையும் பாரசீகப் படையை தடுப்பதில் மட்டும்தான் ஈடுபட்டனர். அந்தச் சமயத்தில் அங்கும் ஒரு துரோகி இருந்தான். கிரேக்கவாசியான அவன் பாரசீகப் படையினருக்கு ஒரு ரகசிய வழியைக் காட்டிக் கொடுத்தான். ‘அதன் வழியாகச் சென்றால் நீங்கள் கிரேக்க ராணுவத்தை வட்டமாக முற்றுகையிடலாம். ஜெயிப்பது எளிது’ என்றான்.

பாரசீகப்படை பேரார்வத்துடன் ரகசிய வழிக்குள் நுழையத் தொடங்கியது.

மன்னன் லியோனிடஸ் யாரும் எதிர்பாராத ஒரு ஆணையை உதிர்த்தார். ‘‘.இங்கே நானும் என்னுடன் வந்த 300 ராணுவ வீரர்களும் மட்டும் இருந்தால் போதுமானது. பிற ராணுவ வீரர்கள் இங்கிருந்து கலைந்து விடுங்கள். வருங்காலத்தில் பாரசீகத்தை எதிர்த்து வெற்றி கொள்ள அவர்கள் தேவைப்படுவார்கள்’’ என்றார். வீரத்திலும் ஒரு தியாகம்.

4,000 வீரர்களை கலைந்து செல்ல உத்தரவிட்டாலும் அவர்களில் 700 பேர் நகர மறுத்தார்கள். பாரசீகப் படையுடன் தாங்கள் அப்போதே மோதுவோம் என்பதில் பிடிவாதம் காட்டினார்கள். ஆக 1000 பேருடன் மன்னன் லியோனிடஸ் அங்கே இருந்தார். பாரசீகப்படை வட்டமிட்டு முற்றுகையிட்டது. சிறந்த வியூகம், மிக அதிக அளவில் படையினரின் எண்ணிக்கை ஆகிய இரண்டு காரணங்களால் பாரசீகப்படை வென்றது. மன்னன் லியோனிடஸ் இறுதிவரை மிக வீரமாகப் போரிட்டு பின்னர் இறந்தார்.

ஸ்பார்ட்டா பகுதியினருக்கு இதில் பெரும் சிலிர்ப்பு ஏற்பட்டது. காரணம் ‘வெற்றி அல்லது வீர மரணம்’ என்பதுதான் அவர்களது யுத்தத் தீர்மானமாக விளங்கியது. இன்றும் தெர்மோபயிலே பகுதியில் மன்னன் லியோனிடஸின் சிலை கம்பீரமாக நிற்கிறது. ஸ்பார்ட்டாவில் அவரது நினைவுச் சின்னம் கம்பீரமாக காட்சி தருகிறது.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x