Published : 05 Jul 2015 12:12 PM
Last Updated : 05 Jul 2015 12:12 PM

உலக மசாலா: குழந்தை பருவம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது!

கலிஃபோர்னியாவைச் சேர்ந்தவர் ரஸ்ஸல் பாவெல். இவர் தன்னுடைய இடது கையில், வலது கையால் ஓவியம் தீட்டி வருகிறார். வண்ணம் காய்வதற்குள் ஒரு தாளில் கையை அழுத்துகிறார். ஓவியம் அப்படியே தாளில் பதிந்துவிடுகிறது. அதை ஃப்ரேம் செய்து, நிரந்தரமாக இருக்கும்படிச் செய்துவிடுகிறார். கறுப்பு, வெள்ளையை மட்டும் பயன்படுத்தி, இடது கையின் சமதளமற்ற பகுதிகளில் வேகமாக ஓவியம் தீட்டுகிறார். ஓவியம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்க முடியாது. ஓவியம் காய்வதற்குள் அதை பிரிண்ட் எடுத்துவிட வேண்டும். இப்படிக் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓவியம் தீட்டி முடிக்க வேண்டும் என்ற நெருக்கடி தனக்குப் பிடித்திருப்பதாகச் சொல்கிறார் ரஸ்ஸல். இவரது இடது கை ஓவியங்களில் பாப் மார்லி, ஃப்ரைடா காலோ போன்ற உலகப் புகழ்பெற்றவர்களின் படங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

அட! ஓர் ஓவியரின் கையில் இன்னோர் ஓவியர் ஃப்ரைடா!

ரஷ்யாவில் சமீப காலமாக வீடற்ற ஏழைகளின் ப்ளாக் வீடியோக்கள் பெரிய அளவில் பிரபலமாகி வருகின்றன. ஸென்யா யாகுட் என்பவரின் வீடியோ யூ ட்யூபில் வெளியாகி, 35 ஆயிரம் சந்தாதாரர்களைப் பெற்றிருக்கிறது. 10 லட்சம் முறை இவரது வீடியோ பார்க்கப்பட்டிருக்கிறது. இன்ஸ்டாகிராமில் இவரை 3 ஆயிரம் பேர் பின்பற்றுகிறார்கள். 43 வயது யாகுட், 5 ஆண்டுகளாக வீடின்றி, வேலையின்றி வசித்து வருகிறார். மாஸ்கோவில் வேலையும் வீடும் இல்லாத ஒரு மனிதன் எப்படி வாழ்கிறான் என்பதைத்தான் இவரது வீடியோ சொல்கிறது. நிலத்துக்கு அடியில் ஒரு குழியில் வசிக்கிறார் யாகுட். முதலுதவி, ஊசி நூல், ரேடியோ போன்ற பொருட்கள் அங்கே இருக்கின்றன. தன்னுடைய வாழ்க்கையை அழகான வார்த்தைகள் போட்டு வீடியோவில் பேசிக்கொண்டே செல்கிறார் யாகுட். ஒவ்வொரு குப்பைத் தொட்டியையும் ஆராய்கிறார். பழைய செருப்புகள், சிறிய சைக்கிள், தின்பண்டங்கள், துணிகள் போன்றவற்றை எடுத்து, தனக்குத் தேவையானவற்றைப் பிரித்துக்கொள்கிறார். பிளாஸ்டிக் பாட்டில்களைக் கடையில் விற்று பணம் வாங்கிக்கொள்கிறார். இவர் சார்பாக ஆண்ட்ரெய் வூடூ என்பவர் வீடியோ எடுத்து, இணையத்தில் ஏற்றுகிறார். யாகுட்டைப் பார்ப்பவர்கள் அவர் ஏழை என்றே சொல்ல மாட்டார்கள். மிக அழகான, தூய்மையான உடைகளோடு காட்சியளிக் கிறார். ‘’என் உடையிலோ, தோற்றத்திலோ எந்தக் குறையும் காட்டிக் கொள்ள மாட்டேன். என்னைப் பார்த்தவுடன் மரியாதை வருகிறது அல்லவா, இதை வைத்துதான் பொதுக்கழிப்பிடங்கள், உணவு விடுதி களுக்கு என்னால் தயக்கமின்றி நுழைய முடிகிறது. என் வீடியோவைப் பார்க்கும் நீங்கள், ஒவ்வொருமுறை க்ளிக் செய்யும்போதும், இந்த வீடற்ற ஏழைக்கு ஒரு மேன்மையான வாழ்க்கை உங்களால் கிடைக்கப் போகிறது என்று நினைத்துக்கொள்ளுங்கள்’’ என்கிறார் யாகுட்.

ம்ம்… ஒருகாலத்தில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்துக்கொண்டிருந்த ஒரு நாட்டில் இன்று இந்த நிலை…

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த சர்வதேச புகைப்படக் கலைஞர் ஐரினா வெர்னிங். ‘நிகழ் காலத்திலிருந்து கடந்த காலத்துக்கு…’ என்ற தலைப்பில் 3 ஆஸ்திரேலியப் பெண்களைப் புகைப்படங்கள் எடுத்தி ருக்கிறார். ஒருவரின் சிறிய வயது புகைப்படத்தை வைத்துக்கொண்டு, இன்று அவருக்கு அதே ஆடை, பொம்மை, செல்லப் பிராணி, செருப்பு, தலை அலங்காரம் போன்றவற்றைத் தானே வாங்கிக் கொடுத்து விடுகிறார். அவற்றை அணிந்துகொண்டு புகைப்படத்தில் இருப்பது போலவே காட்சியளிக்கிறார்கள். இன்றைய உருவத்தில் இருந்தாலும், சின்ன வயது புகைப்படத்தைப் போலவே மற்ற எல்லா அம்சங்களும் பொருந்தியிருக்கும். நடாலியா, அலினா, சூசி என்ற மூன்று பெண்களையும் இப்படிப் படம் பிடித்து அசத்தியிருக்கிறார் ஐரினா. ‘’கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்காதவர்களே இருக்க முடியாது. என் உருவம் மாறாவிட்டாலும் கூட இந்தப் புகைப்படம் எடுக்கும்போது சின்ன வயதுக்குச் சென்று திரும்பி வந்தேன்’’ என்கிறார் நடாலியா.

குழந்தை பருவம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x