

சீனாவிடமிருந்து 8 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப் பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் தார் மற்றும் சீனாவின் கப்பல் கட்டுமானக் கழகத்தின் வணிக அங்கமான 'சீனா கப்பல் கட்டுமான சர்வதேச நிறுவன'த்தின் தலைவர் ஜு சிகின் ஆகியோர் சமீபத்தில் சந்தித்து கலந்துரையாடி னர். அப்போது பாகிஸ்தான் கடற்படைக்கு 8 நீர்மூழ்கிகள் வாங்க முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும், சீனாவின் உயர் அதிகாரிகள் இதற்கு இசைவு தெரிவித்த பிறகே முறையான ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்று பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 4 பில்லியன் முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை (சுமார் ரூ. 24 ஆயிரம் கோடி முதல் ரூ.30 ஆயிரம் கோடி வரை) இருக்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் தொகையை நான்கு கட்டங்களாக பாகிஸ்தான் செலுத்த இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2011ம் ஆண்டு முதலே சீனாவிடமிருந்து நீர்மூழ்கிகள் வாங்க பாகிஸ்தான் முயற்சிப்பதாக செய்திகள் வெளியானபடி இருந்தன. ஆனால், எந்த வகை நீர்மூழ்கிகளை அது வாங்கப்போகிறது என்பது இன்னும் தெரியவில்லை.
எனினும், 'யுவான் 041 டீசல் எலக்ட்ரிக்' ரக நீர்மூழ்கிகளை அது வாங்கப்போவதாக தகவல் கசிந்துள்ளது.
கடந்த மாதம் தனது கடல்சார் பாதுகாப்பு மையத்துக்காக சீனா விடமிருந்து 6 ரோந்து வாகனங்கள் வாங்க பாகிஸ்தான் ஒப்பந்தம் போட்டது குறிப்பிடத்தக்கது.