

ஈரான் வழியில் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை மேற்கொள்ள தங்களுக்கு விருப்பம் இல்லை என்று வடகொரியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்க வெளியுறவு கொள்கைகளுக்கு எதிராக எங்களது அணுசக்தி திட்டம் மிக அத்தியாவசியமானது. இந்த விஷயத்தில் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துடன் எங்களது நாட்டை ஒப்பிடாதீர்கள்.
தென் கொரியாவுடன் அமெரிக்கா மேற்கொள்ளும் ராணுவ செயல்பாடுகள், கூட்டு பயிற்சி போன்ற நடவடிக்கைகள் எங்களுக்கு எப்போதுமே ஆத்திரம் ஏற்படுத்துகிறது. இதனால் எங்களது அணுசக்தி திட்டங்களை முடக்க பேச்சுவார்த்தை என்ற நூதன மோசடியை நடத்த அந்த நாடு முயற்சிக்க வேண்டாம். அதில் எங்களுக்கு விருப்பம் கிடையாது.
எங்களுடையது அணுசக்தி நாடு. எங்களது நாட்டுக்கு சொந்த நலன்கள் உண்டு" என்று திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஈரானுடன் சமீபத்தில் அணுசக்தி பேச்சுவார்த்தை கையெழுத்தாகியுள்ளது.
இதனால் ஈரானின் அணுசக்தி திட்டங்களை ஐ.நா. பாதுகாப்பு அமைப்பு நேரடியாக சோதனை செய்ய முடியும். இந்த உடன்பாட்டின்பேரில், ஈரான் மீது முன்னதாக விதித்திருந்த பொருளாதார தடையை அமெரிக்கா வரும் காலங்களில் விலக்கிக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஈரானும் அணு ஆயுதங்களை தயாரிக்க மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளது.
ஈரான் போன்று வடகொரியா மீதும் அமெரிக்கா பெருளாதார தடை விதித்துள்ளது. அணுசக்தி சோதனை முயற்சிகளால் அமெரிக்காவுக்கும் வட கெரியாவுக்கு தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது.
வட கொரியா தனது நாட்டுக்கான அணுசக்தியை அவ்வப்போது பகிரங்கமாக சோதித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.