

பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் பேச்சுவார்த்தை நடத்தியதை ஐநா பொதுச் செயலர் பான் கி மூன் வரவேற்றுள்ளார். இந்த தகவலை பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் நிருபர்களிடம் கூறினார்.
ஆக்கபூர்வ பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளை ஐநா ஆதரிக்கும். சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. ஒன்றுக்கொன்று பிரச்சினைகளுடன் உள்ள நாடுகள் தமக்குள் ஆக்கபூர்வமாக பேச்சு நடத்துவதை எப்போதுமே ஐநா வரவேற்கிறது என்றார்.
மோடி பதவியேற்ற நிகழ்ச்சிக்கு சார்க் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் முதல்முறையாக அழைக்கப்பட்டனர். இந்த தலைவர்களில் பாகிஸ்தான் பிரதமரும் ஒருவர். பிரதமராக மோடி பதவியேற்ற முதல் நாளில் இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பில், பிற சார்க் அமைப்பு நாடுகளுடன் எப்படி இந்தியாவுடனான உறவு அண்மை ஆண்டுகளில் முன்னேறி வருகிறதோ அதுபோலேவே அரசியல், கலாசாரம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் இந்தியா, பாகிஸ்தான் உறவு மேம்படும் என நம்புவதாக மோடி கூறினார்.
45 நிமிடம் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தை நல்லமுறையில் ஆக்கபூர்வமாக சுமூக சூழலில் நடை பெற்றதாக வர்ணித்தார் நவாஸ் ஷெரீப். இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஊடகங்களுக்கு கொடுத்த செய்திக் குறிப்பில் நவாஸ் குறிப்பிட்டார்.