

தாய்லாந்தில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளதைத் தொடர்ந்து, அந்நாட்டுக்கு வழங்கப்படும் நிதி உதவியை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.
ஜனநாயக ஆட்சியை திரும்பக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தாய்லாந்து ராணுவ தலைமை தளபதியிடம் அமெரிக்க ராணுவ தலைமை தளபதி அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செய்தித்தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறும்போது, “ஏற்கெனவே வெளிநாட்டு ராணுவ நிதி உதவி பிரிவின் கீழ் வழங்கப்படும் 35 லட்சம் அமெரிக்க டாலர் நிதி உதவியை ரத்து செய்துள்ளோம். இப்போது சர்வதேச ராணுவ கல்வி மற்றும் பயிற்சிக்கு வழங்கப்படும் நிதி உதவியும் ரத்து செய்யப் பட்டுள்ளது. இதுபோன்று பிற பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் நிதி உதவியை ரத்து செய்வது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறோம். அதே சமயம் நிதி உதவிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட வில்லை. பரஸ்பர உதவி, பொருளாதார மற்றும் சர்வதேச பாதுகாப்பு உதவி என்ற வகையில் தாய்லாந்திற்கு 1 கோடியே 5 லட்சம் அமெரிக்க டாலரை 2013-ம் ஆண்டு அளித்தோம். இது தவிர ஆசியான், அபெக் அமைப்புகளுக்கு நாங்கள் அளித்து வரும் நிதி உதவி, அந்த அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ள அனைவருக்கும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தாய்லாந் தும் பலனடைந்து வருகிறது. இந்த அமைப்புகளின் மூலம் தாய்லாந் திற்கு கிடைத்து வரும் நிதி உதவி யின் அளவை அறிந்து கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.
இதற்கிடையே அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்திப் பிரிவு செயலாளர் ரியர் அட்மிரல் ஜான் கிர்பி கூறுகையில், “தாய்லாந்து ராணுவ தலைமைத் தளபதி பிரயுத் சான் ஓஜாவை அமெரிக்க ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் ரேமண்ட் டி.ஓடியெர்னோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தாய்லாந்தில் மீண்டும் ஜனநாயக ஆட்சியை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ரேமண்ட் டி.ஓடியெர்னோ வலியுறுத்தினார்” என்றார்.
தாய்லாந்து பயணத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கும்படி அரசு அதிகாரிகளுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.