ஐ.நா.சபை தலைமையகத்தில் 21-ம் தேதி சர்வதேச யோகா தினவிழா: 192 நாடுகளில் 200 கோடி பேர் பங்கேற்பர்

ஐ.நா.சபை தலைமையகத்தில் 21-ம் தேதி சர்வதேச யோகா தினவிழா: 192 நாடுகளில் 200 கோடி பேர் பங்கேற்பர்
Updated on
1 min read

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் மத்திய வெளி யுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொள்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டு முதல் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று ஐ.நா. சபை அறிவித்தது. இதன்படி, வரும் 21-ம் தேதி முதலாவது சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து ஐ.நா. சபைக்கான இந்திய தூதர் அசோக் முகர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் விழாவுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமை தாங்க உள்ளார். விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதில் ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கி-மூன், ஐ.நா.பொது சபையின் தலைவர் சாம் குடேசா, இந்திய ஆன்மிக தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

பாகிஸ்தான், சவுதி அரேபியா, மலேசியா உள்ளிட்ட ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளில் உள்ள 256 நகரங்களில் நடைபெறும் யோகா தின விழாவில் சுமார் 200 கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், உள்நாட்டு போர் காரணமாக யேமனில் மட்டும் இந்த விழா நடைபெறாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in