மூச்சை சோதனை செய்து வயிற்றுப் புற்று நோயைக் கண்டறிதல்: புதிய ஆய்வு

மூச்சை சோதனை செய்து வயிற்றுப் புற்று நோயைக் கண்டறிதல்: புதிய ஆய்வு
Updated on
1 min read

வயிற்றில் ஏற்படும் புற்று நோயை அறிய மூச்சுப் பரிசோதனை முறை ஒன்றை பிரிட்டன் ஆய்வாளர்கள் சோதித்துப் பார்த்துள்ளனர்.

சுமார் 200 நோயாளிகளை இந்த முறையில் பரிசோதனை செய்ததில் 90% துல்லியம் கிடைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் புற்று நோய் தொடர்பான இறப்புகளில் வயிற்றுப் புற்று நோய் 15% தாக்கம் செலுத்தி வருகிறது.

பொதுவாக வயிற்றுப் புற்றுநோயைக் கண்டறிய ‘எண்டோஸ்கோபி’ முறையே பெரும்பாலும் கையாளப்பட்டு வருகிறது. அது மிகவும் செலவாகக்கூடிய சோதனை முறையாகும். அதிலும் வயிற்றுப் புற்று நோய் இருப்பது அவ்வளவாக எண்டோஸ்கோபி முறையில் தெரியவருவதில்லை என்பதே மருத்துவர்களின் குறையாக இருந்து வருகிறது.

இது குறித்து லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்தவரும் இந்த ஆய்வின் முன்னோடியுமான ஜார்ஜ் ஹன்னா கூறும்போது, “எங்களது இந்த மூச்சுப் பரிசோதனை முறையில் 90% துல்லியத்துடன் வயிற்றுப் புற்று நோய் கண்டறியப்படுகிறது, மேலும் எதிர்மறை முடிவுகளை அளிக்கக் கூடிய எண்டோஸ்கோபி முறைக்கு மாற்றாக இதனை பயன்படுத்தலாம்.

ஆரம்பத்திலேயே நோய்கணிப்பு துல்லியமாக அமைந்து விட்டால், வயிற்றுப் புற்றால் பாதிக்கப்பட்டோரில் நிறைய பேர் உயிரைக் காப்பாற்ற முடியும்” என்றார்.

உணவுக்குழாய் மற்றும் இரைப்பை புற்று நோய் உள்ளவர்கள் வெளியே விடும் மூச்சுக்காற்றில் உள்ள சில ரசாயனத்தை வைத்து புற்று நோய் கண்டறியப்படுகிறது.

ஒரு பையுடன் இணைக்கப்பட்ட மூச்சு இழுத்து விடும் கருவியில் நோயாளிகள் மூச்சை விட வேண்டும், பிறகு இது பரிசோதனைக்குட் படுத்தப்படும்.

இது பெருமளவு வெற்றி பெற இன்னும் நிறைய சோதனைகள் தேவைப்படும் என்று கூறப்படுகிறது.

வயிற்றுப் புற்று நோய்க்கான ஆரம்பகால அறிகுறிகள்:

நெஞ்செரிச்சல், மேல்வயிற்றுப் பகுதியில் வலி, வாந்தி, குமட்டல் மற்றும் பசியின்மை. நோய் சற்றே முற்றிய நிலையில், உடல் எடை குறைதல், சருமம் மஞ்சளாதல், கடும் வாந்தி, விழுங்குவதில் சிரமம், மலத்தில் ரத்தம் ஆகியவையாகும்.

இது வயிற்றிலிருந்து லிவர், நுரையீரல், எலும்புகள் என்று பரவும் தன்மையுடையது.

வயிற்றுப் புற்று நோய் எளிதில் தனது அறிகுறிகளை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. அல்லது வயிற்றுப்புற்று நோய்க்கான அந்தக் குறிப்பிட்ட நோய் அறிகுறிகள் அல்லாது பிற நோய்களுக்கான அறிகுறிகளாக வெளிப்படும் என்வே இதனை கணிப்பது சற்று கடினம்தான்.

இந்த ஆய்வு Annals of Surgery என்ற இதழில் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in