இந்தியா உள்ளிட்ட 50 நாடுகள் இணைந்து சீனா தலைமையில் ஆசிய உள்கட்டமைப்பு வங்கி

இந்தியா உள்ளிட்ட 50 நாடுகள் இணைந்து சீனா தலைமையில் ஆசிய உள்கட்டமைப்பு வங்கி
Updated on
1 min read

இந்தியா உள்ளிட்ட 50 நாடுகள் இணைந்து சீனா தலைமையில் ஆசிய உள்கட்டமைப்பு, முதலீட்டு வங்கியை (ஏஐஐபி) தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த வங்கிக்கான முதலீடு ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் கோடியாகும்.

இந்த வங்கி தொடர்பான 50 நாடுகள் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டம் நேற்று சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இந்த வங்கி தொடங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியா முதலில் கையெழுத்திட்டது. அதைத் தொடர்ந்து 49 நாடுகளின் பிரதிநிதிகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஆண்டு இறுதியில் மேலும் 7 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளன.

வங்கி தொடங்குவதற்கான முதலீட்டில் 75 சதவீதத்தை ஆசிய நாடுகள் அளிக்கின்றன. ஒவ்வொரு நாடும் தங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்ப முதலீட்டில் பங்களிப்பை செலுத்துகின்றன.

அதிகபட்சமாக சீனா 30.34 சதவீத முதலீட்டையும், இந்தியா 8.52 சதவீத முதலீட்டையும், ரஷ்யா 6.66 சதவீத முதலீட்டையும் அளிக்கின்றன. இந்த ஆண்டு இறுதியில் இந்த வங்கி செயல்படத் தொடங்கும்.

அமெரிக்கா, ஜப்பான் ஆகியவை இந்த வங்கி அமைப்பதில் இணையவில்லை. மேலும் இந்த வங்கி தொடங்குவதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. ஏனெனில் இந்த வங்கி மூலம் சீனாவின் பொருளாதார வல்லமை மேலும் வலுவடைந்துவிடும் என்ற அச்சமே முக்கியக் காரணம். இது தவிர உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கிக்கு இது போட்டியாக அமையும்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் 2013 அக்டோபரில் இந்த வங்கி தொடங்கும் திட்டத்தை முதல் முதலில் வெளியிட்டார். அப்போது இந்தியா, பாகிஸ் தான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 21 நாடுகள் அதனை உடனடியாக ஆதரித்தன. இந்த வங்கி பெய்ஜிங்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in