

இலங்கை நாடாளுமன்றம் நேற்றிரவு கலைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை அதிபர் மைத்திரிபால சிறிசேனா பிறப்பித்தார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நிறைவடைய இருந்தது. இந்நிலையில் 10 மாதங்களுக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.
புதிய அதிபராக அவர் பதவியேற்றவுடன் கடந்த ஏப்ரலிலேயே நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். எனினும் உள்நாட்டு அரசியல் குழப்பங்களால் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றம் நேற்றிரவு கலைக்கப்பட்டது. வரும் ஜூலையில் வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்றும் ஆகஸ்ட் 17-ம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.