

சீனாவின் யாங்ஸி நதியில் நிகழ்ந்த கப்பல் விபத்தில், பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. நதியில் மூழ்கியவர்களைத் தேட 200 நீர்மூழ்கி வீரர்கள் களத்தில் உள்ளனர்.
யாங்ஸி நதியில் 458 பயணிகளுடன் கூடிய கப்பல் சில நாட்களுக்கு முன்பு மூழ்கியது. இதற்கு நதியில் ஏற்பட்ட திடீர் புயல்தான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் அந்தப் புயலில் அவ்வளவு பெரிய கப்பல் எப்படி ஒரே நிமிடத்தில் மூழ்கும் என்று தற்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
சீன வானிலை நிர்வாக மையத்தின் படி, கப்பல் மூழ்குவதற்கு நதியில் ஏற்பட்ட திடீர் புயல்தான் காரணம் என்று கருதப்படுகிறது. மேலும், "அந்தப் புயல் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தாக்குப்பிடித்தது. நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் புயல் வீசியதால், அந்த கப்பலின் கேப்டனால், அபாய எச்சரிக்கை விடுக்கக் கூட முடியவில்லை" என்று அந்த மையம் கூறியுள்ளது.
எனில், புயல் உருவாக இருப்பதை ஏன் முன் கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு அந்த மையம் எந்த பதிலும் சொல்லவில்லை. இதுதவிர, அந்தப் புயல் ஏற்பட்ட போது, கப்பல் உடனே வேறு திசைக்குத் திரும்பியது. கப்பல் திசை திரும்பியதற்குக் காரணம் புயலா அல்லது புயலில் சிக்காமல் இருப்பதற்கு கப்பல் பணியாளர்கள் வேறு திசையில் அதனை செலுத்தினார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே கப்பல் மூழ்கியவுடன் அதில் இருந்து தப்பித்து கரையேறி விபத்து குறித்த தகவல் கூறிய கப்பலின் கேப்டன் மற்றும் முதன்மைப் பொறியாளர் ஆகியோர் உள்ளூர் போலீஸாரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.