

நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளை மீட்பதற்கு தமது ராணுவம் உதவும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நைஜீரிய நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளை மீட்கும் பணியில் உதவ உலக நாடுகள் முன்வந்துள்ளன. இந்நிலையில், அமெரிக்க கண்காணிப்பு விமானங்களும் இந்தப் பணியில் ஈடுபடும் என்று அந்நாடு அறிவித்துள்ளது.
நைஜீரியாவில் போகோ ஹாரம் என்ற தீவிரவாத அமைப்பு, கடந்த மாதம் 14-ம் தேதி நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாநிலம் சிபோக் கிராமத்தின் பள்ளியில் இருந்து 200 மாணவிகளைக் கடத்தி சென்றனர்.
கடத்தப்பட்ட மாணவிகளை மீட்க நைஜீரிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. மாணவிகளை மீட்க உதவி செய்யும்படி நைஜீரிய அரசும் உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகள் எதையும் எடுக்க மாட்டோம் என்று அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், நைஜீரிய எல்லையில் அமெரிக்க ராணுவ விமானங்களைக் கொண்டு, கடத்தப்பட்ட மாணவிகள் மற்றும் போகோ ஹோரம் தீவிரவாதிகளை கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த செய்தியில், '’நைஜீரிய தலைநகர் அபுஜாவுக்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கொண்ட குழு விரைந்துள்ளது. எல்லையில் ராணுவ விமானங்களை கொண்டு மாணவிகள் குறித்த விவரங்களை அறிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது.
கடத்தப்பட்ட மாணவிகளை மீட்கும் பணியில் நைஜீரிய அரசுக்கு உதவியாக அமெரிக்க ராணுவ வீரர்கள் 16 பேர் இணைந்துள்ளனர். மாணவிகள் கடத்தல் தொடர்பாக அங்கு நேரில் சென்று நிலைமையை ஆராய்வது, நைஜீரிய அரசுக்கு தேவையான உதவிகளையும், அறிவுரைகளையும் வழங்குவது என அனைத்து உதவிகளையும் அமெரிக்க வீரர்கள் செய்வார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று இளம் மாணவிகளை கடத்திய போகோ ஹாரம் தீவிரவாதிகள், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் அபுபக்கர் என்ற தீவிரவாதி, "சிறையில் உள்ள எங்களது இயக்கத்தை சேர்ந்தவர்களை விடுதலை செய்தால், கடத்தப்பட்டுள்ள மாணவிகளை நாங்களும் விடுதலை செய்வோம்" என்று தகவல் கூறப்பட்டிருந்தது.
மேலும், போகோ ஹாரம் வெளியிட்டுள்ள வீடியோவில் மாணவிகள் பர்தா அணிந்தபடி காட்சியளிக்கின்றனர். இது தொடர்பாக அபுபக்கர் கூறுகையில், கடத்தப்பட்ட மாணவிகள் இஸ்லாமுக்கு மாற்றப்பட்டு விட்டதாக குறிப்பிட்டிருந்தார்.