

ஜப்பானின் ரயில்வே நிறுவனமொன்றைப் பல முறை பொருளாதாரச் சரிவிலிருந்து மீட்ட நட்சத்திரப் பூனையான தமா இறப்புக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த இறுதிச் சடங்கில் நிறுவன அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் கலந்துகொண்டு, தமாவைப் பெண் தெய்வமாய் எண்ணி வழிபட்டனர்.
மேற்கு ஜப்பானின் கிஷி ரயில் நிலையத்தில் 2007-ம் ஆண்டு நிலைய அதிகாரியாய்ப் பொறுப்பேற்றது தமா. நிலைய அதிகாரியின் தொப்பியை அணிந்து, பயணச்சீட்டு தரப்படும் நுழைவுவாயிலில் அமர்ந்து பொறுமையாகவும், அமைதியாகவும் பயணிகளை வரவேற்று, வழியனுப்பி வைத்துக் கொண்டிருந்தது.
நாளடைவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த தமா, ரயில்வே நிர்வாகத்துக்கும், உள்ளூர் பொருளாதாரத்துக்கும் பெருமளவில் உதவி செய்தது.
கடந்த ஏப்ரலில் தனது 16வது பிறந்த நாளைக் கொண்டாடிய தமா, இதயக் கோளாறு காரணமாக, கடந்த 22-ம் தேதி இறந்தது. ஜப்பானின் பாரம்பரிய சமயமான ஷிந்தோ முறைப்படி நடத்தப்பட்ட இறுதிச் சடங்கில், தமா தெய்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதிகபட்சமான ஜப்பானியர்களால் பின்பற்றப்படும் ஷிந்தோ சமயத்தில் விலங்குகள் உள்பட ஏராளமான தெய்வங்கள் இருக்கின்றன.
இறுதிச் சடங்கு நடைபெற்ற இடத்தில், நிலைய அதிகாரிக்கே உரித்தான கருநீலத் தொப்பியோடு பூனை தமாவின் ஓவியங்கள் அங்கே வரையப்பட்டிருந்தன. தர்பூசணி, ஆப்பிள், முட்டைக்கோஸ், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை தமாவின் புகைப்படத்துக்குப் படைக்கப்பட்டன.
"முதலில் ஒரு பூனையை நிலைய அதிகாரியாக்குவது தயக்கமாக இருந்தது. ஆனால் தமா தன் வேலையை சரியாகவே செய்தது. அதற்குப் பிறகு எங்கள் நிறூவனத்துக்குக் கிடைத்ததெல்லாம் பாராட்டுகளும், பரிசுகளும்தான்" என்றார் வாக்கயமா மின்-ரயில் நிறுவனத் தலைவர் கொஜிமா.
தமா தன்னுடைய பதவிக்காலத்தில், வாக்கயமா மின்-ரயில் நிறுவனத்துக்கு கிட்டத்தட்ட 56.5 கோடி ரூபாய்களைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் நித்தமா என்னும் மற்றொரு பூனைக்கும் பயிற்சியளித்துள்ளது. தற்போது பயிற்சியில் உள்ள நித்தமா, விரைவில் நிலைய அதிகாரியாய்ப் பொறுப்பேற்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.