

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது காணா மல் போனவர்கள் தொடர்பான புகார்களை கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிபரின் விசாரணை ஆணையம் நேற்று புதிதாக விசாரணையை தொடங்கியது.
இதுகுறித்து இந்த விசாரணை ஆணைய செயலாளர் எச்.டபிள்யூ.குணதாசா கூறியதாவது:
திரிகோணமலை மற்றும் முத்தூர் ஆகிய கிழக்கு நகரங் களில் வரும் செவ்வாய்க்கிழமை வரை எங்கள் குழுவினர் பொதுமக்களை சந்திப்பார்கள். அப்போது போரின்போது தங்கள் உறவினர்கள் காணாமல் போனது குறித்து ஏற்கெனவே புகார் கொடுத்திருந்தாலும், மீண்டும் இந்த ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கலாம்.
மேலும் புதிதாக புகார் கொடுக்க விரும்புகிறவர்களையும் ஆணையம் வரவேற்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முதலில் 3 உறுப்பினர்களைக் கொண்டிருந்த இந்த ஆணையம், இப்போது 5 உறுப்பினர்களைக் கொண்டதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆணையம் கடந்த ஏப்ரல் மாதம் தனது இடைக்கால அறிக்கையை அதிபர் மைத்ரிபால சிறீ சேனாவிடம் தாக்கல் செய்தது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து 16,153 புகார்களும் பாதுகாப்புப் படையினர் குடும்பத்தினரிட மிருந்து 5,200 புகார்களும் பெறப்பட்டதாக இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
1983 ஜனவரி 1 முதல் 2009 மே 19 வரையிலான காலத்தில் கடத்தப்பட்டதாக அல்லது காணாமல் போனதாக பதிவான புகார் குறித்து விசாரிக்க இந்த ஆணையம் அமைக்கப்பட்டது.