Last Updated : 05 Jun, 2015 12:50 PM

 

Published : 05 Jun 2015 12:50 PM
Last Updated : 05 Jun 2015 12:50 PM

மலாலாவை சுட்ட தீவிரவாதிகளை விடுவித்ததா பாகிஸ்தான்?

மலாலாவை சுட்டதற்காக 25 ஆண்டுகள் தண்டனை பெற்ற தீவிரவாதிகளை பாகிஸ்தான் அரசு ரகசியமாக விடுவித்ததாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் மலாலாவை படுகொலை செய்ய முயற்சித்த குற்றத்துக்காக 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தண்டனை பெற்றவர்களில் சிலரைத் தவிர மற்ற தீவிரவாதிகளை பாகிஸ்தான் அரசு ரகசியமாக விடுவித்ததாக மேற்கத்திய பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.

மலாலாவை சுட்ட தாலிபான் தீவிரவாதிகளை சிறையில் அடைத்த சிலநாட்களிலேயே பாகிஸ்தான் அரசு வெளியேவிட்டதாகவும் இந்த விவகாரத்தை ஊடகங்கள் பெரிதாக்கும் என்பதால் இந்தத் தகவலை பாகிஸ்தான் அரசு ரகசியமாக வைத்து இருப்பதாகவும் 'டெய்லி மிர்ரர்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், இதனை பாகிஸ்தான் அதிகாரிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். இஸ்ரருல்லா, இசார் உர் ரகுமான் ஆகிய இரண்டு பேரும் சிறையிலே உள்ளனர் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தாக அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கு அருகே பள்ளி முடித்து திரும்பிக் கொண்டிருந்த சிறுமி மலாலா மீது தாலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது கழுத்து மற்றும் தலையில் குண்டுகள் பாய்ந்து மலாலா உயிருக்குப் போராடி சர்வதேச நாடுகளின் உதவியோடு மிகப் பெரிய மருத்துவ ரீதியிலான போராட்டத்துக்கு பின்னர் காப்பாற்றப்பட்டார்.

சிறுமி மலாலா மீது துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றத்துக்காக 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு பின்னர், சில நாட்களிலேயே தீவிரவாதிகள் பலர் ரகசியமாக விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x