

இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து வரும் பொருளாதாரம் என்பதிலிருந்து, மறுமலர்ச்சி பெற்று வரும் பொருளாதாரமாக இருக்கிறது என்று ஸ்வீடனில் நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார். ஸ்வீடன் நாட்டுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரணாப், ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தற்போது இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து வரும் பொருளாதாரம் என்பதிலிருந்து மறுமலர்ச்சியடைந்து வரும் பொருளாதாரமாக மாறியிருக்கிறது. உலகளவில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தாலும், விரைவில் 9 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை இந்திய பொருளாதாரம் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக இருக்கும். இந்நிலையில், இங்குள்ள இந்தியர்கள் அனைவரும் தங்கள் தாய்நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற தங்களின் பங்களிப்பைச் செய்ய வேண்டும். 'இந்தியாவில் தயாரிப்போம்', `டிஜிட்டல் இந்தியா', `ஸ்மார்ட் நகரங்கள்' மற்றும் `தூய்மையான இந்தியா' போன்ற அரசின் திட்டங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரணாப்பின் சுற்றுப் பயணத்தின்போது, சிறு குறு மற்றும் மத்திம நிறுவனங்களுக்கு, நகர மேம்பாடு, சுகாதாரம் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, 16ம் கார்ல் கஸ்தாஃப் மன்னர் மற்றும் அரசி சில்வியா, இளவரசி விக்டோரியா மற்றும் இளவரசர் டேனியல் ஆகியோர் பிரணாப்பை வரவேற்றனர். நேற்று, அந்நாட்டு பிரதம்ர் ஸ்டீவன் லோஃபென்னையும் சந்தித்து உரையாடினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.