Last Updated : 22 Jun, 2015 09:46 AM

 

Published : 22 Jun 2015 09:46 AM
Last Updated : 22 Jun 2015 09:46 AM

யோகாவை கொண்டாடிய உலக நாடுகள்: சிறப்புத் தொகுப்பு

சிங்கப்பூரில் 4,000 பேர் பங்கேற்பு

முதலாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிங்கப்பூரில் சுமார் 50 இடங்களில் நேற்று நடை பெற்ற நிகழ்ச்சியில் 4 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்திய தூதரக வளாகத்தில் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் விஜய் தாகுர் சிங் தலைமை தாங்கினார். அந்நாட்டு பிரதமர் அலுவலக அமைச்சர் கிரேஸ் பூவும் இதில் பங்கேற்றார். அதைத் தொடரந்து பிற மையங்களில் யோகா தினம் நடைபெற்றது.

இதுகுறித்து விஜய் தாகுர் சிங் கூறும்போது, “சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள், தொழில் துறை பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற் றனர். யோகா பயிற்சியை தொடர்ந்து செய்வதன் மூலம் சுகாதாரமான வாழ்க்கை கிடைக்கும். உலகில் உள்ள அனைவரும் இந்தப் பயிற்சியை செய்வதை ஊக்குவிக்க வேண்டும்” என்றார்.

190 நாடுகளில் யோகா தின கொண்டாட்டம்

உலகம் முழுவதும் 190 நாடுகளில் நேற்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

பிரிட்டிஷ் தலைநகர் லண்டன், அமெரிக்காவின் நியூயார்க் நகரம், பிரான்ஸ் தலைநகர் பாரீஸ், ஆஸ்திரேலிய தலைநகர் கான்பரி உட்பட உலகம் முழுவதும் 251 முக்கிய நகரங்களில் பிரமாண்ட யோகா பயிற்சி முகாம்கள் நடைபெற்றன.

லண்டனில் தேம்ஸ் நதிக்கரையில் நூற்றுக்கணக் கானோர் யோகா பயிற்சி செய்தனர். இதேபோல நியூயார்க் நகரில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் மத்தியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசினார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நூற்றுக்கணக்கானோர் இசைக்கு ஏற்ப யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலிய தலைநகர் கான்பரி மற்றும் சிட்டி, மெல்போர்ன் நகரங்களில் நடைபெற்ற யோகா முகாம்களில் ஏராளமானோர் குவிந்தனர்.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் யோகா முகாம்கள் நடைபெற்றன. பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முகாமில் இந்தியத் தூதர் அசோக் காந்தா கலந்து கொண்டார்.

இதுபோல உலகம் முழுவதும் யோகா தின கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

ஆஸ்திரேலிய பிரதமர் ஆதரவு

சர்வதேச யோகா தினத்தையொட்டி ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் கூறியதாவது: பல நூற் றாண்டுகளாக யோகா பயிற்சியை மனித குலம் கடைப்பிடித்து வரு கிறது. இதன் மூலம் மனமும் உடலும் சமநிலைப்படுத்தப்படுகிறது. இந்தியாவின் பாரம்பரிய யோகா பயிற்சியை உலக நாடுகளுக்கு வழங்கியிருப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியை சமர்ப்பிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் பல நகரங் களில் நேற்று யோகா பயிற்சி முகாம்கள் நடைபெற்றன. ஆஸ்திரேலிய யோகா ஆசிரியர் பெட் கால்மேன் கூறியபோது, 89 வயதிலும் நான் ஆரோக்கியமாக வாழ்வதற்கு யோகாதான் காரணம், தலைவலி ஒருபோதும் வந்தது கிடையாது, நான் 60 ஆண்டுகளாக யோகா பயிற்சி மேற்கொண்டு வருகிறேன் என்று தெரிவித்தார்.

மூளை செயல்பாட்டை தூண்டுகிறது யோகா: ஆய்வில் தகவல்

20 நிமிடம் யோகா பயிற்சி செய் வதால் மூளையின் செயல்பாடு தூண்டப்படுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் தலைமையில் நடைபெற்ற ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வுக்கு இளம் வயது பெண்கள், கல்லூரி மாணவர்கள் உட்படுத்தப்பட்டனர். ஹத யோகா என்கிற பயிற்சியை மேற்கொண்ட நபர்களிடம் ஆய்வு நடத்தியபோது அவர்களின் நினைவுத்திறன் வேகமாகவும் துல்லியமாகவும் அதிகரிப்பது தெரியவந்தது. புதிய தகவல்களை பயன்படுத்துவது மற்றும் தக்கவைத்துக் கொள்வது ஆகியவற்றிலும் மூளை சிறப்பாக செயல்படுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

யோகா பயிற்சி செய்து முடித்த உடனேயே அவர்களது மூளை யின் செயல்பாடு தூண்டப்படுவ தும் தெரியவந்துள்ளது. இந்த பலன் மிதமானதும் கடுமையானது மான சுவாசப்பயிற்சி நடத்தி முடிப் பதால் கிடைக்கும் பலனைவிட அதிகமாகும்.

ஆய்வுகுழுவுக்கு தலைமை தாங்கிய நேஹா கோத் இதுபற்றி கூறும்போது, “யோகா என்பது தொன்மையான இந்திய அறிவி யல் மற்றும் உடல் அசைவுகளை உள்ளடக்கிய வாழ்க்கை முறை ஆகும். இதுமட்டுமல்லாமல் சுவாசம், தியானம் ஆகியவற்றை யும் இது நெறிப்படுத்தக்கூடியது ஆகும்” என்றார்.

தேம்ஸ் நதிக்கரையில் யோகா

பிரிட்டனில் தேம்ஸ் நதிக்கரை யில் நேற்று ஏராளமானோர் திரண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரிட்டனின் பல்வேறு நகரங்களில் நேற்று யோகா பயிற்சி நடைபெற்றது.

லண்டனில் தேம்ஸ் நதிக்கரையில் நடைபெற்ற யோகா பயிற்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டது.

யோகா தினத்தை அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் வெளியிட்டுள்ள செய்தியில், சர்வதேச யோகா தினம் கொண்டாட வேண்டுமென்ற இந்திய பிரதமர் மோடியின் வேண்டுகோள், ஐ.நா.வில் 177 நாடுகள் ஆதரவுடன் நிறைவேறியது. அதற்கு ஆதரவு அளித்த நாடுகளில் பிரிட்டனும் ஒன்று.

இந்தியாவின் பாரம்பரிய கலையான யோகா பயிற்சிக்கு இங்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர். அவர்களது ஆர்வம் வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவில் யோகாவுக்கு மக்கள் அமோக வரவேற்பு

சர்வதேச யோகா தினம் இப்போது தான் முதல்முறையாக அனுசரிக்கப்பட்டாலும், அமெரிக்காவில் யோகா ஏற்கனவே மிகவும் பிரபலமாக உள்ளது. அங்கு 2 கோடிக்கும் மேற்பட்டோர் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அந்நாட்டில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் புரளும் தொழிலாகவும் யோகா உள்ளது. மற்ற நாடுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் யோகாவை அதிகம் பேர் பயிற்சி செய்வதற்கு அதன் நன்மைகளை அவர்கள் முழுமையாக அறிந்து கொண்டதே முக்கிய காரணம்.

2008-ம் ஆண்டில் அமெரிக்காவில் சுமார் 1 கோடியே 60 லட்சம் பேர் யோகா பயின்றனர். இப்போது இந்த எண்ணிக்கை 2 கோடியை தாண்டிவிட்டது. இதனால் புதிது புதிதாக பல்வேறு யோகா பள்ளிகளும் அங்கு தொடங்கப்பட்டு வருகின்றன.

யோகாவுக்கு பேராதரவு ஐ.நா. பொதுச்செயலர் பான்கி மூன் நெகிழ்ச்சி

எத்தனையோ சர்வதேச தினங்கள் கொண்டாடினாலும் யோகா தினத்துக்கு கிடைத்த ஆதரவு எப்போதும் காணாதது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் ஐநா பொதுச் செயலர் பான் கி மூன்.

சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் மன்ஹாட்டன் ஹோட்டலில் தங்கியிருந்த வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நேற்று முன்தினம் மாலை சந்தித்தார் பான் கி மூன். அப்போது இந்த கருத்தை சுஷ்மாவிடம் பான் கி மூன் தெரிவித்தார்.

சுஷ்மாவை சந்தித்தபோது நமஸ்தே என்று ஹிந்தியில் வணக்கம் தெரிவித்த பான் கி மூன், முதல் சர்வதேச யோகா தினம் என்பதால் மனதில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. உலகெங்கிலும் இதற்கு எப்போதும் காணாத ஆதரவு கிடைத்துள்ளது என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x