

கத்தார் தமிழர் சங்கம் சார்பாக, தோஹாவில் உள்ள இந்திய கலாச்சார மையத்தில் மே 8 ம் தேதி (வியாழக்கிழமை) மாலை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் 22 வயதான மாற்றுத் திறனாளி இளைஞன் அர்ஜூன் அசோக்ராஜ், இரு இசை விசைப்பலகைகளை (Musical Keyboard) ஒருங்கே வைத்து தமிழ் திரையிசைப் பாடல்களை வாசித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ‘தோஹா த்வனி’ மெல்லிசைக் குழுவினர் பாடிய பாடல்கள் வந்திருந்த ரசிகர்களின் பாராட்டை பெற்றது. தோஹா த்வனி குழுவின் நிறுவனர்கள் சம்பத் பாலாஜி மற்றும் குருபிரசாத் தசரதன் இருவரும், உள்ளூர் கலைஞர்களை கொண்டே சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி குறித்து பேசினர்.
“கடந்த இருபது வருடங்களில் சாட்டிலைட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பாதிப்பில் இசைப் பிரியர்கள், கலைஞர்கள், வல்லுநர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் சமூகத்தில் பலர் மீதும் ஏற்படுத்தி வரும் மாற்றத்தின் ஒரு சிறு துளியே தோஹா த்வனியை நாங்கள் உருவாக்க காரணம் என்றால் மிகையில்லை” என்றார் குருபிரசாத்.
“தமிழர்கள் எண்ணிக்கையில் அதிகம் உள்ள கத்தாரில், பல உள்ளூர் கலைஞர்கள் இசைப் பள்ளிகளில் பயிற்சி பெற்று, நான்கு சுவற்றுக்குள்ளயே தங்கள் திறமையை முடக்கி வைத்திருக்கின்றனர். அருமையான இசை ஆர்வலர்கள் பலரை நாங்கள் சந்திக்கும் போதெல்லாம், ‘நமக்கென்று ஒரு மேடை இருந்தால், அது திறமையை வெளிப்படுத்தும் வடிகாலாய் அமையுமே’ என்ற சிந்தனை எழும். அந்த சிந்தனையே தோஹா த்வனியின் விதை” என்கிறார் சம்பத் பாலாஜி.
குழுவில் பள்ளி செல்லும் சிறார்களான ட்ரம்மர் அபிக்ஷித், பாடகியர் ஜனனி, கிருத்திகா முதல், இல்லத்தரசிகள் கிடாரிஸ்ட் ஹேமா, பாடகியர் வர்ஷினி, விஜி அசோக், பெரும் நிறுவனங்களில் பொறுப்பில் இருக்கும் கோபால், கணேஷ், குருபிரசாத் மற்றும் பாலாஜி என்று பலதரப்பட்டவர்களும் அடக்கம்.
‘இசையே எமது சீரிய பொழுது போக்கு’ என்று புன்னகைத்த குருபிரசாத், நிகழ்ச்சியின் போது, “மாற்றுத் திறனாளி அர்ஜூனின் திறமையை ஊக்குவிக்கும் விதமாய், அவர் எமது தோஹா த்வனியின் வருங்கால நிகழ்ச்சிகளில் எங்களுடன் இணைவார்” என்று இனியதொரு அறிவிப்பை வெளியிட்டார்.