

சீனாவின் யாங்ஸி நதியில் சுமார் 500 பேருடன் சென்ற சிறிய ரக சொகுசு கப்பல் தண்ணீரில் மூழ்கியது. இதில் 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 5 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளன. 450-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.
ஆசியாவின் மிக நீளமான நதி யாங்ஸி. இந்த நதி சீனாவின் தென்மேற்கு, மத்திய, கிழக்குப் பகுதிகளில் 6300 கி.மீட்டர் தொலைவுக்கு பாய்ந்தோடுகிறது.
யாங்ஸி நதியில் ஏராளமான சுற்றுலா கப்பல்களும் இயக்கப் படுகின்றன. கடந்த 28-ம் தேதி ஈஸ்டன் ஸ்டார் என்ற சிறிய ரக சொகுசு கப்பல் நான்ஜிங் நகரில் இருந்து சோங்கிங் என்ற நகருக்குப் புறப்பட்டது. இதில் சுமார் 500 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 397 பேர் சுற்றுலா பயணிகள் ஆவர்.
இந்த சொகுசு கப்பல் திங்கள்கிழமை அதிகாலை ஜியான்லி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கியது. இதுவரை 15 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 5 பேரின் உடல்கள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன. மீதமுள்ள சுமார் 450-க்கும் மேற்பட்டோரை காண வில்லை.
அவர்களை மீட்க 1800 ராணுவ வீரர்கள், 1600 போலீஸார், 1000 மீட்புப் படை வீரர்கள் இரவு பகலாக போராடி வருகின்றனர். இந்த விபத்தில் கப்பலின் கேப்டன், தலைமை பொறியாளர் ஆகியோர் உயிர் தப்பியுள்ளனர். அவர்கள் கூறியபோது, புயலில் சிக்கி கப்பல் கவிழ்ந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
உறவினர்கள் குற்றச்சாட்டு
நதியில் மூழ்கிய கப்பல் 72 அடி நீளம், 2200 டன் எடை கொண்டது. இதில் 534 பேர் பயணம் செய்ய முடியும். கடந்த 20 ஆண்டுகளாக கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. கப்பலில் இருந்த பயணிகளின் உறவினர்கள் அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர். அவர்கள் கூறியதாவது:
மிகவும் பழமையான கப்பலை இயக்க அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். கப்பலின் உறுதித் தன்மை சோதிக்கப்படவில்லை. அதனால்தான் சிறிய புயலுக்குகூட தாக்குப் பிடிக்காமல் கப்பல் தண்ணீரில் மூழ்கியுள்ளது. கப்பல் மூழ்கி இரண்டரை மணி நேரம் கழித்தே மீட்புப் படையினர் சம்பவ பகுதிக்கு வந்துள்ளனர். என்று அவர்கள் கூறியுள்ளனர்.