

சர்வதேச அளவில் முதல் யோகா தினம், உலகின் 192 நாடுகளைச் சேர்ந்த 256 நகரங்களில் கொண்டாடப்படுவதாக ஐ.நா.வுக்கான இந்தியப் பிரதிநிதி அசோக் முகர்ஜி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. அறிவித்தது. இதையொட்டி உலக சுகாதார நிறுவனத்தின் செயல் இயக்குநர் நடா மெனாப்டே நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மிகச் சிறந்த கலையான யோகாவை ஆதரிக்கும் வகையில் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் யோகா மையங்களுடன் உலக சுகாதாரம் நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருகிறது.வேத காலத்தில் இந்தியாவால் உலகுக்கு அளிக்கப்பட்ட கொடையான யோகாவை கற்பதும், அறிவியல் ஆதாரங்களுடன் அதை ஆதரிப்பதும் பின்னர் உலக சுகாதார திட்டங்களில் இணைப்பதும் அவசியம்.
உடல் நலனுக்கு எதிரான சவால்களை எதிர்கொள்ள யோகா பயன்படுகிறது. நோயை தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் யோகாவுக்கு மிகச்சிறந்த இடமுண்டு. யோகாவை உலக சுகாதார திட்டங்களில் இணைப்பதற்கான நடவடிக்கையில் உலக சுகாதார நிறுவனம் ஈடுபட்டுள்ளது” என்றார்.