

அமெரிக்காவுக்கு, அதன் ஆதரவு பெற்ற ஆசிய நாடுகளுக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்சீனக் கடலில் உள்ள தீவுகளுக்கு சொந்தம் கொண்டாடுவதில் ஜப்பான், வியட்நாம், பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளுடன் சீனாவுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அந்த 3 நாடுகளுக்குமே அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது. அந்நாடுகளுடன் இணைந்து சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்கா ராணுவ பயிற்சியும் நடத்தியுள்ளது. இது சீனாவின் ஆத்திரத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை ஜி ஜின்பிங் மறைமுகமாக எச்சரித்துப் பேசினார். அப்போது, அண்டை நாட்டுக்கு எதிராக மூன்றாவது நாட்டுடன் இணைந்து ராணுவ பயிற்சி மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகள் நமது பிராந்தியத்தில் நிலவி வரும் பொது அமைதிக்கு உகந்தது அல்ல. ஆசிய பகுதியில் நம்மைத் தவிர பிற நாடுகளுக்கு இடம் கொடுப்பது உகந்தது அல்ல. அது நமது வலிமையையும், ஒற்றுமையையும் மெதுவாகக் கெடுத்து விடும் என்று ஜி ஜின்பிங் குறிப்பிட்டார்.