

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இமாம் அலியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, அடுத்தடுத்து நடத்தப்பட்ட தொடர் கார் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர்.
பாக்தாத்தில் இன்று அந்நாட்டின் முக்கிய இஸ்லாமிய புனித தியாகியாக கருதப்படும் இமாம் அலியின் பிறந்த நாளை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் அடுத்தடுத்து இரு கார் குண்டுகள் வெடித்தன.
சதர் நகரில் நடைபெற்ற முதல் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 4 பேர் பலியானதுடன், 6 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அதே பகுதியில் உள்ள குடியிருப்பு அருகே மீண்டும் கார் குண்டுவெடித்ததில் 3 பேர் பலியானதுடன் 7 பேர் படுகாயமடைந்தனர்.
அடுத்து, பாக்தாதின் கிழக்கிலுள்ள ஜமைலா மாவட்டத்தில் மற்றொரு கார் குண்டு வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்டதுடன் 10 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ச்சியாக கிழக்கு பாக்தாத்தில் நடைபெற்ற மற்றொரு கார் குண்டுவெடிப்பில் போக்குவரத்து காவல் நிலையம் ஒன்று முற்றிலும் சேதமடைந்தது. அதில் ஒரு போக்குவரத்து காவலர் உள்பட மூன்று பேர் பலியானார்கள். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.
தொடர்ந்து மேலும் சில இடங்களிலும் தொடர் கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. பலியானவர்களில் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குண்டுவெடிப்பு சம்பவத்தை அந்நகரின் உள்ள ஒரு தொலைக்காட்சி நிறுவனம் பதிவு செய்து ஒளிபரப்பியது. அதில் கார்களில் குண்டுவெடித்தவுடன் அவை தீப்பிடித்து எரிந்ததுடன் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.
இந்தப் பயங்கர தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஈராக்கில், ஷியா பிரிவு மக்களை குறிவைத்து, அல் காயிதா அமைப்பு தாக்குதலை நடத்தி வருகிறது.
ஈராக்கில் மக்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பலதரப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அங்கு அவ்வப்போது பொது மக்கள் மீதான தாக்குதல் அசாதாரணமாக நடைபெறுகிறது. ஈராக்கில் 2007 முதல் 2008- ம் ஆண்டு வரை 8,868 அப்பாவி பொதுமக்கள் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கை ஒன்றை வெளியிட்டது.