Last Updated : 11 Jun, 2015 03:46 PM

 

Published : 11 Jun 2015 03:46 PM
Last Updated : 11 Jun 2015 03:46 PM

பண்டமாற்றுப் பாலுறவு: ஹைத்தியில் ஐ.நா. அமைதிப்படை அட்டூழியம்

'பாலுறவுக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வோம்' என்று கூறி, ஹைத்தி பெண்களிடம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதிப்படை வீரர்கள் 'பண்டமாற்றுப் பாலுறவு' செயல்களில் ஈடுபட்டதாக தகவல்கள் அம்பலமாகியுள்ளது.

வட அமெரிக்க நாடான ஹைத்தியில் வாழும் ஏழை மக்களுக்கான உதவிகளை கடந்த 2004-லிருந்து ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் அளித்த வந்தனர்.

இந்த நிலையில், தங்களது அமைதிக் குழு வீரர்கள் 'பண்டமாற்றுப் பாலுறவு' செயல்களில் ஈடுப்பட்டதை ஐ.நா. கண்காணிப்புக் குழு கண்டுபிடித்ததாகவும், அதன் விவரம் தங்களுக்கு தெரியவந்ததாகவும் 'தி அசோசியேடட் பிரஸ்' செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஐ.நா. அமைதிப் படைக் குழுவில் உலகெங்கும் சுமார் 125,000 பேர் பணியாற்றுகின்றனர். இவர்கள் உலக நாடுகளில் நடக்கும் மோசமான சூழல்களில் அதன் மக்களுக்காக சேவை செய்யும் பணிகளில் ஈடுபடுகின்றனர். அவர்களது பணியை கண்காணிக்கும் பொறுப்பில் ஐ.நா. மேற்பார்வை குழு செயல்பட்டு வருகிறது.

மேற்பார்வை குழுவின் ஆய்வின்படி, வட அமெரிக்க நாடுகளில் மிகவும் ஏழ்மையான நாடான ஹைத்தியில், அமைதிக் குழு பணியாற்றியபோது அங்கிருக்கும் பெண்களுக்கு உணவு, உடை, தண்ணீர், குழந்தைகளுக்கான வசதிகள் என அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு கைமாறாக தங்களுடன் பாலுறவு கொள்ள வலியுறுத்தியதை மேற்பார்வை குழு கண்டறிந்துள்ளது.

"கிராமப்புற பெண்களுக்கு பசி, வாழும் இடம், குழந்தைகளுக்கான தேவைகள், மருத்துவப் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் என எதுவும் இல்லை. இதுபோன்ற தேவைகளை அளிப்பதற்கு மாறாக அந்தப் பெண்களிடம் உறவுகொள்ளும் வழக்கத்தை அமைதிக் குழுவினர் வைத்துள்ளனர்.

அவை மட்டுமல்லாமல், செல்போன், லேப்டாப், பணம் உள்ளிட்ட பொருட்களையும் அந்தப் பெண்களுக்கு குழுவினர் அளித்தனர்" என்று மேற்பார்வை குழுவின் விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹைத்தியில் 231 பெண்களிடம் கடந்த வருடம் மேற்பார்வை குழுவினர் ஆய்வில் ஈடுபட்டதில் இந்த விவரம் அம்பலமானது. அதனை 'தி அசோசியேடட் பிரஸ்' செய்தி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தச் செயல் எந்த சமயத்தில் நடந்தது, அதில் ஈடுப்பட்ட குழுவினரது விவரங்கள் என எதுவும் தெரியாத நிலையில் இது குறித்து பேச ஐ.நா. அதிகாரிகள் மறுத்துவிட்டனர். ஆனால், இந்த அதிர்ச்சிச் தகவல் தொடர்பான அறிக்கையை ஒரு சில மாதங்களில் ஐ.நா. வெளியிடும் என்று எதிர்பார்ப்பதாக அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x