

ஆய்வுக் கூடங்களில் உடன் பணியாற்றும் பெண்கள் பல்வேறு விதமாக ஆண்களுக்கு தொல்லை அளிப்பதாக விஞ்ஞானி டிம் ஹன்ட் கூறியுள்ளார். கடுமையான எதிர்ப்பை அடுத்து நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
2001-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை பெற்றவர் டிம் ஹன்ட் (72). தென் கொரியாவில் நடந்த உலக அறிவியல் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் பேசிய விஞ்ஞானி டிம் ஹன்ட் இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் கருத்தரங்கில் பேசும்போது, "விஞ்ஞானிகள் பாலியல் ரீதியாக பிரிக்கப்பட்ட வெவ்வேறு தளங்களில் பணியாற்ற வேண்டும். பெண்களுடன் ஆய்வு கூடங்களில் பணியாற்றும் சக ஆண் விஞ்ஞானிகளுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
உதாரணத்துக்கு, அவர்கள் 3 விதங்களில் தொல்லை அளிப்பார்கள். முதலில், நாம் அவர்களோடு காதல் வசப்பட்டுவிடுவோம். இரண்டாவது, அவர்களுக்கு நம் மீது காதல் வரும். மூன்றாவது, அவர்களை நாம் விமர்சித்தால், உடனடியாக அழுதுவிடுவார்கள். இதனால் அவர்களோடு இணைந்து பணியாற்றவே முடியாது.
அழுவதை பெண்கள் தங்களது பாதுகாப்புக்காக பயன்படுத்துகின்றனர். ஆனால் அது அப்படி இல்லை. அவர்களது எண்ணம் தவறு" என்றார்.
டிம் ஹன்ட்டின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, அவர் பிபிசி ரேடியோவுக்கு அளித்த பேட்டியில் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
அதில் அவர் கூறும்போது, "நகைச்சுவைக்காக அப்படி கூறினேன். எங்களது வேலையில் ஏற்படும் பிரச்சினைகளை கூறினேன். பிரச்சினைகளில் நான் கூறியதும் ஒன்று. நான் கூறியது முற்றிலும் உண்மை. உண்மையில் எனக்கு அந்த அனுபவம் உள்ளது. ஆய்வகத்தில் பணியாற்றும் பெண்களிடம் காதலில் விழுந்து உள்ளேன். அவர்களுக்கும் காதல் ஏற்பட்டிருக்கிறது. இது அறிவியல் ஆராய்ச்சிக்கு மிகப் பெரிய தடைக்கல்.
ஆய்வகத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் தங்கள் நிலை உணர்ந்து நடந்து கொள்வது அவசியம். உணர்வை கட்டுப்படுத்த முடியாது. இதனால் விஞ்ஞானிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.
எனது தவறு என்னவென்றால், பத்திரிகையாளர்கள் இருக்கும் இடத்தில் நான் சிறிது யோசித்து பேசியிருக்க வேண்டும். உணர்ச்சி மிகுதியால் வாழ்க்கை கடினமாகி விடும். நான் கூறியதில் தவறு இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்" என்றார்.