கிடுகிடுத்த கியூபா - 11

கிடுகிடுத்த கியூபா - 11
Updated on
2 min read

கியூபாவின் அதிபரான ரால் காஸ்ட்ரோவின் ஃப்ளாஷ்பேக்கை மேலும் சிறிது பார்ப்போம்.

1958 ஜூன் 26 அன்று ரால் காஸ்ட்ரோவின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஓர் அமெரிக்க சுரங்க நிறுவனத்தில் (கியூபாவில் அமைந்தது) பணி புரிந்த பத்து அமெரிக்கர்களையும், இரண்டு கனடா நாட்டினரையும் கடத்தினார்கள். அதற்கு அடுத்த நாளே கடற்பகுதியில் உலவிய 24 அமெரிக்கர்களையும் கடத்தினார்கள். இவர்கள் அனைவரும் பணயக் கைதிகளானார்கள்.

இது பரபரப்புச் செய்தியாகி உலக நாடுகளை கவனிக்க வைத்தது. ஆனால் இது போன்ற செயல்களை பொது மக்களேகூட விரும்பவில்லை. எனவே பின்னர் பணயக் கைதிகள் கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கப்பட்டனர்.

பின்னொரு காலத்தில் பிடல் காஸ்ட்ரோவின் ஆராக்கியக் குறைவு காரணமாக ரால் காஸ்ட்ரோ கியூபாவின் அதிபரானது அந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின்படி சரியானதுதான். அதிபருக்கு இயலாமை ஏற்பட்டால் துணை அதிபர்தான் அந்தப் பொறுப்புகளை ஏற்க வேண்டும்.

பிடல் காஸ்ட்ரோவின் உடல் நலம் போதிய அளவு முன்னேற்றமடையவில்லை. “2008 பிப்ரவரியில் நடைபெறும் அதிபர் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை’’ என்று அவர் அறிவித்து விடவே, அந்தத் தேர்தலில் ரால் காஸ்ட்ரோ நாட்டின் அதிகாரப்பூர்வ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 2013-லும் அவரே மீண்டும் அதிபராக தேர்வு பெற்றார்.

ஆக அவர் இப்போது இரண்டாம் முறையாக அதிபர். மூன்றாம் முறையும் ரால் காஸ்ட்ரோவே இந்தப் பதவியில் தொடர்வாரா? மாட்டாராம். 2018 அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று கூறியிருக்கிறார் ரால் காஸ்ட்ரோ.

மனித உரிமைகளை கியூபா அரசு அடிக்கடி மீறுகிறது என்ற குற்றச்சாட்டை பல அமைப்புகள் நீண்டகாலமாக முன்னிறுத்துகின்றன. “எந்த வகையான அரசியல் எதிர்ப்பையும் கியூபா அரசு சகித்துக் கொள்வதே இல்லை’’ என்ற எண்ணம் பரவலாகி வருகிறது. ஐரோப்பிய யூனியன் இது தொடர்பாக ஓர் எச்சரிக்கையை விடுத்தது. பதிலுக்கு கியூபா “எங்கள்மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத் தடை கூட மனித உரிமை மீறல்தான்’’என்கிறது.

உலகெங்கும் எடுத்த கணக்கெடுப்பின்படி (சீனாவுக்கு அடுத்ததாக) மிக அதிக அளவில் பத்திரிகையாளர்களைக் கைது செய்த அரசு கியூபாதான்.

கியூபாவின் சிறைகள் எண்ணிக்கையிலும் சரி, அளவிலும் சரி பிரம்மாண்டமானவை. 40 மிக அதிக பாதுகாப்பு கொண்ட சிறைகள், 30 ஓரளவு பாதுகாப்பு கொண்ட சிறைகள் என்று எண்ணிக்கை விரிகிறது. கியூபா அளவுக்கு பரப்பைக் கொண்ட நாட்டுக்கு இது அதிகம்தான்.

எல்லா அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டுமென்று மீண்டும் மீண்டும் கோரி வருகிறது ஐரோப்பிய யூனியன். 2010 ஜூலை அன்று தங்கள் நாட்டில் 167 அரசியல் கைதிகள் உள்ளனர் என்று கூறியது கியூபாவில் உள்ள மனித உரிமைக் குழு. இந்த அமைப்பு அதிகாரப்பூர்வமற்றது என்பதால் இந்த எண்ணிக்கையை முழுவதுமாக ஏற்க உலக அமைப்புகள் தயாராக இல்லை.

அமெரிக்கா மட்டும் கியூபாவுக்கு விதித்த வர்த்தக தடையை முழுவதுமாக நீக்கி விட்டால், கியூபா நிமிர்ந்து விடும் என்ற நிலை பல ஆண்டுகளாக நிலவுகிறது. இதற்கு உதவுமாறு மெக்ஸிகோ, கொலம்பியா, வெனிசுவேலா ஆகிய நாடுகளை கேட்டுக் கொண்டது கியூபா.

ஆனால் கியூபாவுக்கு உதவினால் அது காஸ்ட்ரோவை (பிடல்) பலப்படுத்திவிடும் என முன்பு அஞ்சியது அமெரிக்கா. “கியூபா முதலில் அரசியல் கைதிகளை விடுவிக்கட்டும். வெளிநாட்டு முதலீடுகளைத் தடையின்றி அனுமதிக்கட்டும். அதற்குப் பிறகு நாங்கள் கியூபாவுடன் வணிகத்தைத் தொடங்குகிறோம்’’ என்று கிளிண்டன் காலத்திலிருந்தே கூறிவருகிறது அமெரிக்கா.

கடந்த பல மாதங்களாக பிடல் காஸ்ட்ரோ குறித்து வதந்தி ஒன்று வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. `பிடல் காஸ்ட்ரோ’ இறந்து விட்டார். ஆனால் அதைத் வெளியிடாமல் கியூபா அரசு மறைத்துக் கொண்டிருக்கிறது’.

உள்ளூர்வாசிகளில் பலரும் கூட இதை நம்பத் தொடங்கி விட்டார்கள் என்றால் அதற்குப் பின்னணி உண்டு. ஒன்று பிடல் காஸ்ட்ரோ கடுமையான உடல்நலக் குறைவு காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். இரண்டு, ஒன்பது மாதங்களாக அவரை எங்குமே காணமுடியவில்லை.

இந்த நிலையில்தான் கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சி நாளிதழான `கிரான்மா’ பிடல் காஸ்ட்ரோவின் பல புகைப்படங்கள் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. அவை சமீபத்தில்தான் எடுக்கப்பட்டன என்பதற்கு ஆதாரமாக சமீப செய்திகள் அடங்கிய செய்தித் தாளை அவர் படிப்பதுபோன்ற புகைப்படங்களும் அவற்றில் இடம் பெற்றுள்ளன.

ஹவானா பல்கலைக்கழகத்தின் மாணவர் கூட்டமைப்பின் தலைவரான ராண்டி பெர்டோமோ கார்ஸியா சமீபத்தில் தான் பிடல் காஸ்ட்ரோவை மூன்று மணிநேரம் சந்தித்து உரையாடிவிட்டு வந்ததாக அறிவித்திருக்கிறார். “மிகவும் உயிர்த் துடிப்புடன் செயல்படுகிறார். விளையாட்டிலிருந்து வானியல் வரை, தினசரி உடற்பயிற்சிகளிலிருந்து உலக நடப்புகள் வரை அனைத்தையும் பேசுகிறார்.

ஆப்பிரிக்காவுடன் கியூபா கொள்ள வேண்டிய உறவு, எபோலாவுக்கு எதிராக கியூபா நாட்டு மருத்துவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்று எல்லாமே எங்கள் பேச்சுவார்த்தையில் இடம் பெற்றன’’ என்கிறார் பெர்டோமோ.

என்றாலும் `பிடல் காஸ்ட்ரோ’ உயிருடன் இருப்பது உண்மை. ஆனால் மூளைச் செல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் டிமென்ஷியா என்ற நிலையால் அவர் தாக்கப்பட்டிருக்கிறார். அவரால் ஆரோக்கியமாகப் பேச முடியுமென்றால் அதை எப்போதோ மக்களுக்குக் காட்டி சந்தேகத்தைப் போக்கியிருப்பார்கள்’’ எனும் வதந்தி கொடிகட்டிப் பறக்கக் தொடங்கி இருக்கிறது.

(உலகம் உருளும்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in