Published : 02 May 2014 10:26 AM
Last Updated : 02 May 2014 10:26 AM

அசாமில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்: 11 பேர் பலி

அசாம் மாநிலத்தில் இன்று அதிகாலை போடோ தீவிரவாதிகள் நடத்திய இரு வேறு தாக்குதல்களில் மொத்தம் 11 பேர் கொல்லப்பட்டனர்.

தடை செய்யப்பட்ட போடோலேண்ட் தேசிய ஜனநாயக முற்போக்கு அமைப்பைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் இரண்டு கிராமங்களில் தாக்குதல் நடத்தினர்.

முதலில் போடோலேண்ட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடத்திய தாக்குதலில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். இத்தகவலை அசாம் மாநிலம் போலீஸ் (சட்டம் ஒழுங்கு) டிஜிபி ஏ.பி.ரவுத் உறுதி செய்துள்ளார்.

பின்னர் கோக்ரஜார் மாவட்டத்தின் பாலபராஜன் கிராமத்தில் இன்று அதிகாலை 1 மணியளவில் போடோ தீவிரவாதிகள் ஒரு வீட்டினுள் புகுந்தனர்.

வீட்டில் இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களில் 3 வயது குழந்தையும் அடங்கும். சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த 4 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டதாக போலீஸ் ஐ.ஜி. எல்.ஆர்.பிஷ்னோய் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் போடோ தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் போலீஸாரும் துணை ராணுவப் படையினரும் கூட்டாக ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாகவே கோக்ரஜார் மாவட்டத்தில் போடோ மற்றும் பிற இனத்தினர் இடையே இனவெறி மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன எனபது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x