

தாய்லாந்தில் உள்ள இரு புகழ் பெற்ற புரதான சின்னங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உலக பாரம்பரிய அந்தஸ்து குறைக்கப்படும் என யுனெஸ்கோ எச்சரித்துள்ளதால், அவற்றை புனரமைத்து பாதுகாக்கும் முயற்சியில் தாய்லாந்து இறங்கியுள்ளது.
தாய்லாந்தில் உள்ள டாங் பயாயென் காவோ யாய் வன வளாகம் மற்றும் அயுத்தயா வரலாற்றுப் பூங்கா ஆகியவற்றுக்கு உலக புரதான சின்னங்களில் உயர் தர அந்தஸ்து அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவற்றை முறை யாக பராமரிக்காததையடுத்து சிறப்புத் தகுதிநிலையைக் குறைக்க யுனெஸ்கோ முடிவு செய்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெள்ளத்தால் அயுத்தயா பூங்கா பெருமளவு பாதிக்கப்பட்டது. அது சீரமைக்கப்படாமை குறித்து யுனெஸ்கோ கவலை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் டபோங் ரத்தனசுவான் கூறும்போது, “டாங் பயாயென் காவோ யாய் வன வளாகத்துக்கு உள்ள அச்சுறுத்தல்களைச் சமாளிக்க மேலும் ஓராண்டு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வரும் யுனெஸ்கோ மாநாட்டில், அப்பகுதியை எங்களால் பாதுகாக்க முடியும் என்பதற்கான திட்டவரைவை சமர்ப்பிக்க உள்ளோம்” என்றார்.
வரும் 28-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை ஜெர்மனியில் யுனெஸ்கோவின், உலக புராதன சின்னங்கள் குழு மாநாடு நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே, டாங் பயாயென் காவோ யாய் வனப்பகுதியில், சட்ட விரோதமாக சயாமீஸ் ஈட்டி மரங்கள் கடத்தப்படுவதை தடுத்தல், வனத்துக்குள் புதிய நெடுஞ்சாலை அமைப்பதற்கான பரிந்துரை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்படி தாய்லாந்துக்கு உலக புராதன சின்னங்கள் குழு வேண்டுகோள் விடுத்திருந்தது.
கேயாங் கிராசான் தேசிய பூங்காவுக்கு உலக புராதன சின்ன அந்தஸ்து கோர தாய்லாந்து திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.