

எகிப்து கலவரத்தின்போது, சிறைச்சாலையிலிருந்து கைதிகளை தப்பவைத்த குற்றத்துக்காக முன்னாள் அதிபர் மொர்சிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை கெய்ரோ நீதிமன்றம் உறுதி செய்தது.
வெளிநாட்டினருடன் சேர்ந்து, நாட்டுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், மொர்சிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கெய்ரோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அவருடன் அவரது இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சியின் ஆலோசகர் முகமது பேடி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோருக்கு கடந்த மே மாதம் 16-ம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அந்நாட்டு மரபுப்படி, தண்டனை முடிவுகள் மத குருவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், மத தலைமையும் மொர்சியின் தண்டனையை உறுதி செய்வதாக அறிவித்தது.
இதனையடுத்து மொர்சி தூக்கை கெய்ரோ நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மொர்சியின் மரண தண்டனை ரத்து செய்யப்படும் என அவரது ஆதரவாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் நீதிமன்றத்தின் முடிவு அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சதித் திட்ட வழக்கு அல்லாமல், மேலும் மொர்சி மீதான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
எகிப்தில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் முகமது மொர்சி. மொர்சியின் கொள்கைகளுக்கு எதிராக அந்த நாட்டில் கிளர்ச்சிப் படை உருவாகி, அவருக்கு எதிராக தொடர் போராட்டங்கள் வெடித்தன. இதில் பலர் பலியாகினர்.
தொடர் கலவரங்கள், உள்நாட்டுப் பிரச்சினைகளை அடுத்து சர்வதேச அழுத்தங்களால் மொர்சியை கடந்த 2013-ம் ஆண்டு ராணுவம் வலுக்கட்டாயமாக பதவியிலிருந்து வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.
எகிப்து அரசியல் வரலாற்றில் அதிபர் பதவி வகித்த ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.