

பிரான்ஸ் அதிபர்களை அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான என்.எஸ்.ஏ. ஒட்டுகேட்டு உளவு பார்த்ததாக விக்கிலீக்ஸ் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான ஆதாரங்களை வெளியிடப்போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளது விசிலூதியான விக்கிலீக்ஸ்.
பிரான்ஸ்-க்ரீஸ் உடன்பாடு, அமெரிக்கா மற்றும் ஜெர்மனி நாட்டுடனான பொருளாதார ஒப்பந்தங்கள் தொடர்பான பல உரையாடல்களை என்.எஸ்.ஏ. உளவு பார்த்திருப்பதாக வெளியாகி இருக்கும் விக்கிலீஸின் தகவல் பிரான்ஸ் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முனனாள் பிரான்ஸ் அதிபர்கள் ஜாக்குவெஸ் சிராக், நிக்கோலஸ் சர்கோஸி மற்றும் ஹாலந்தே ஆகியோர் உளவு பார்க்கப்பட்டதற்கான ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆவணங்கள் அனைத்தும் உறுதி செய்யப்படாமல் உள்ளது.
முக்கியமாக, ஐரோப்பாவிலிருந்து கிரீஸ் வெளியேறுவதற்கான சாத்தியங்கள் தொடர்பாக ஹாலந்தே ஆலோசனை நடத்தியது, 2011-ல் பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸி, அமெரிக்காவின் தலையீடு இல்லாமல் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே அமைதி பேச்சுவார்த்தையை நடத்த முயற்சி செய்ததும் உள்ளிட்டவற்றின் விவரங்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியதாக பி.பி.சி. செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பதில் அளிக்க பிரான்ஸ் அரசுத் தரப்பு மறுத்துள்ள நிலையில், உயர்மட்ட அவசர கூட்டத்தை பிரான்ஸ் அதிபர் ஹாலந்தே கூட்டியுள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டு அமெரிக்க அரசு தரப்பு ரகசிய ஆவணங்களை முதன் முதலாக விக்கிலீக்ஸ் வெளியிட்டு சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் 2013-ல், என்.எஸ்.ஏ-வில் பணியாற்றி அதிலிருந்து வெளியேறிய எட்வார்ட் ஸ்னோடென் தரப்பில் கசியவிடப்பட்ட ஆவணங்களில், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்ட பல நாடுகளின் தலைமை பதவிகளில் இருப்பவரை அமெரிக்கா உளவு பார்த்ததாக அதிர்ச்சியூட்டும் தகவல் அம்பலமானது.
அப்போது, ஜெர்மன் தரப்பில் இந்த விவகாரம் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், பாதுகாப்பு கருதியே உளவு பார்த்ததாக அமெரிக்கா தெரிவித்த விளக்கம் இந்த விவகாரத்தில் ஏற்பட்ட பரபரப்பை சற்று ஓய செய்தது.
இந்த நிலையில் கடந்த வாரம், சவுதி அரேபியா நாடு தொடர்பான 5,00,000 ஆவணங்களை வெளியிட இருப்பதாக விக்கிலீக்ஸ் அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது பிரான்ஸ் தலைவர்கள் உளவு பார்க்கப்பட்டதாக ஆவணங்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து இவ்வாறான ஆவணங்கள் வெளிவரும் என்று விக்கிலீஸ் தெரிவித்துள்ளது.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கூறும்போது, “தங்கள் நாட்டு அரசை கூட்டணி நாடே உளவு பார்க்கிறது என்பதை தெரிந்துகொள்ள பிரான்ஸ் மக்களுக்கு உரிமை உள்ளது. விரைவில் மேலும் பல தகவல் வெளியிடப்படும்” என்றார்.
அமெரிக்கா மறுப்பு
விக்கிலீக்ஸ் ஆவண வெளியீட்டை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது. ''பிரான்ஸ் அதிபர் ஹாலந்தேவை நாங்கள் உளவு பார்க்கவில்லை. இனியும் அவ்வாறு நடக்காது. எங்கள் நாட்டின் பாதுகாப்பு கருதி மட்டுமே உளவு பிரிவு இதுபோன்ற வேலைகளை செய்யும்.
அதனைத் தாண்டி அதற்கான கட்டாயம் எங்களுக்கு இல்லை. உலக தலைவர்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை இதே நிலைப்பாட்டை நாங்கள் கொண்டுள்ளோம்" என்று என்.எஸ்.ஏ. செய்தித் தொடர்பாளர் நெட் பிரின்ஸ் தெரிவித்துள்ளார்.