சிக்கிம் எல்லையில் இருந்து திபெத் செல்ல கைலாஷ் - மானசரோவர் யாத்திரிகர்களுக்கு 2-வது வழியை திறந்துவிட்டது சீனா: முதல்கட்டமாக 44 பேர் பயணம் தொடங்கினர்

சிக்கிம் எல்லையில் இருந்து திபெத் செல்ல கைலாஷ் - மானசரோவர் யாத்திரிகர்களுக்கு 2-வது வழியை திறந்துவிட்டது சீனா: முதல்கட்டமாக 44 பேர் பயணம் தொடங்கினர்
Updated on
1 min read

கைலாஷ் மானசரோவர் யாத்திரி கர்களுக்காக திபெத்தில் உள்ள 2-வது வழித்தடத்தை சீனா நேற்று திறந்து விட்டது. இதையடுத்து முதல் கட்டமாக 44 பக்தர்கள் யாத்திரையை தொடங்கினர்.

திபெத்தின் இமயமலை தொடரில் உள்ள கைலாஷ் மலையை தரிசிக்க இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர்.

வழியில் மானசரோவர் என்ற இடத்தில் உள்ள ஏரியும் மிகவும் பிரசித்தி பெற்றது. இதையும் தரிசித்து கைலாஷ் தரிசனத்தை முடித்துக் கொண்டு பக்தர்கள் திரும்புவார்கள். இங்கு செல்ல உத்தராகண்ட் மாநிலத்தின் எல்லையில் உள்ள லிபுலேக்கை கடந்து திபெத் வழியாக கைலாஷ் செல்ல வேண்டும்.

ஆனால், கடந்த 2013-ம் ஆண்டு ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கில் லிபுலேக் பாதை கடுமையாக சேதம் அடைந்தது. மேலும், இந்த பாதை மிக உயர்ந்தது. கரடு முரடான பாதை. எனவே, இந்த வழியாக செல்லும் கைலாஷ் யாத்திரிகர்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

தவிர, சிக்கிம் - திபெத் எல்லையில் உள்ள நாதுலா வழியாகவும் கைலாஷ் செல் லலாம்.

ஆனால், சீனாவின் கட்டுப் பாட்டில் திபெத் உள்ளது. நாதுலா வழியாக திபெத்துக்குள் நுழையும் பாதை நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் சீன பயணம் மேற்கொண்டார். அப்போது, கைலாஷ் யாத்திரிகர்களின் வசதிக்காக நாதுலா வழியாக திபெத்துக்குள் நுழையும் பாதையை திறந்து விட வேண்டும் என்று மோடி கோரிக்கை விடுத்தார்.

அதை ஏற்றுக் கொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங், விரைவில் நாதுலா வழியாக திபெத்துக்குள் நுழைந்து கைலாஷ் செல்லும் பாதை திறந்து விடப்படும் என்று உறுதி அளித்தார். அதன்படி, இரு நாட்டு உறவை மேம்படுத்தும் விதமாக, திபெத்துக்குள் நுழையும் 2-வது பாதையை சீன அரசு நேற்று திறந்து விட்டது. இதையைடுத்து 44 பக்தர்கள் முதல் கட்டமாக நாதுலா வழியாக திபெத்துக்குள் நுழைந்து கைலாஷ் யாத்திரை மேற்கொண்டனர். அவர்களை திபெத் எல்லையில் சீன அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்று வழியனுப்பி வைத்தனர்.

முன்னதாக இந்தியா வுக்கான சீன தூதர் லீ யூசெங், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிக்கிம் எல்லைக்கு வந்து முதல் நபராக கைலாஷ் செல்லும் திபெத் எல்லைக்குள் நுழைந்தார்.

சிக்கிம் எல்லையில் உள்ள நாதுலா மலை பாதை கடல் மட்டத்தில் இருந்து 4,000 மீட்டர் உயரத்தில் உள்ளது. அங்கிருந்து திபெத்தின் 6,500 மீட்டர் உயரத்தில் உள்ள கைலாஷுக்கு பக்தர்கள் நடைபயணமாக செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in