Last Updated : 29 Jun, 2015 06:35 PM

 

Published : 29 Jun 2015 06:35 PM
Last Updated : 29 Jun 2015 06:35 PM

இஸ்லாமிக் ஸ்டேட் என்று குறிப்பிடாதீர்: ஊடகங்களுக்கு கேமரூன் வேண்டுகோள்

ஐ.எஸ். பயங்கரவாத கும்பலை 'இஸ்லாமிக் ஸ்டேட்' அமைப்பினர் என்று குறிப்பிட வேண்டாம் என்று ஊடகங்களை பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் கேட்டுக்கொண்டுள்ளார்.

லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் அந்நாட்டு ஊடகமான பிபிசி-யை குறிப்பிட்டு, "ஐ.எஸ். இயக்கத்தினரை 'இஸ்லாமிக் ஸ்டேட்' என்று குறிப்பிடுவது ஏற்புடையது அல்ல. அவர்கள் காட்டுமிராண்டித்தனமான செயலில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.

அவர்கள் தங்களை 'இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் மற்றும் லெவண்ட்' என்று அழைத்து நியாயம் கற்பித்து வருகின்றனர். அதன் மூலம் அந்த மோசமான அமைப்புக்கு பிரிட்டன் இளைஞர்களை தவறான முறையில் ஈர்த்து வருகின்றனர்.

விஷமத்தனமாக அப்பாவி மக்களின் மரணத்தை கொண்டாடும் அவர்களுக்கு நற்பெயர் கொடுத்து பாராட்டும் அளவில் தான் 'இஸ்லாமிக் ஸ்டேட்' என்ற பெயர் தோன்றுகிறது. இவர்களுக்கும் இஸ்லாமிய மதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனால் இளைஞர்களுக்கு தவறான செய்தி சென்றடைகிறது. பிபிசி மட்டுமல்லாமல் மற்ற ஊடகங்களும் இவர்களை அவ்வாறு அழைக்க வேண்டாம். வெறும் ஐ.எஸ். அல்லது ஐ.எஸ்.ஐ.எல். என்று குறிப்பிடுங்கள்" என்று கேமரூன் வேண்டுகோள் விடுத்தார்.

துனிசியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பிரிட்டனைச் சேர்ந்த 30 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x