

அமெரிக்காவில் தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளித்துள்ள உச்ச நீதிமன்றத்துக்கு லூசியாணா ஆளுநர் பாபி ஜிண்டால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 36 மாகாணங்களில் தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் உள்ளது. 14 மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், தன்பாலின திருமணம் செய்து கொள்வது அமெரிக்கா முழுவதும் சட்டபூர்வமானது என்று உத்தரவிட்டுள்ளது.
இதற்கு லூசியாணா மாகாண ஆளுநர் பாபி ஜிண்டால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உச்ச நீதிமன்றம் தன்னிச்சையாக கட்டுப்பாடு இன்றி செயல்படுகிறது. தனது விருப்பத்துக்கு ஏற்ப விதிகளை உருவாக்குகிறது. பொறுப்பான நீதிமன்ற அமைப்பாக செயல்படாமல் கருத்துக்கணிப்பு மையம் போல இயங்குகிறது. ஆண், பெண் திருமணம் என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்டது, இதை நீதிமன்றங்கள் மாற்ற முடியாது.
உச்ச நீதிமன்ற உத்தரவு கிறிஸ்தவர்களின் மதச் சுதந்திரத்துக்கு எதிராக உள்ளது. இந்த விவகாரத்தில் மதச்சுதந்திரத்தை காப்பாற்ற போராடுவேன். எனது போராட்டத்துக்கு குடியரசு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
லூசியாணாவில் தற்போது தன்பாலின திருமணத்துக்கு தடை உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவால் அந்த மாநிலத்தில் தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஒபாமா கேரை மாற்ற வேண்டும்
மேலும் ஒபாமாகேர் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கும் பாபி ஜிண்டால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நியூ ஹாம்ப்ஷர் நகரில் அவர் பேசியதாவது:
ஒபாமாகேர் மானியம் சட்டப்பூர்வமானது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இத்திட்டம் அமெரிக்கர்களின் சுதந்திரத்தைப் பறிக்கிறது. இந்தத் திட்டத்தால் ஒருவர் விரும்பாத காப்பீட்டை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கூடுதல் பிரிமியம் செலுத்த வேண்டிய உள்ளது. எனவே ஒபாமாகேர் திட்டத்துக்குப் பதிலாக மக்களுக்குப் பயனளிக்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டியது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் 2016 நவம்பரில் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இரு கட்சிகளிலும் உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு அதிபர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
குடியரசு கட்சி தரப்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜிண்டால் பகிரங்கமாக விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே அவரது கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.