

பருவநிலை மாறுபாட்டில் இருந்து பூமியைக் காப்பாற்ற உலக மக்கள் அனைவரும் புதிய புரட்சியை தொடங்க வேண்டும் என்று கத்தோலிக்க மதத் தலைவர் போப்பாண்டவர் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
பருவநிலை மாறுபாடு குறித்து கத்தோலிக்க கர்தினால்களுக்கு 192 பக்க கடிதத்தை போப்பாண்ட வர் எழுதியுள்ளார். அந்க் கடிதத் தில் கூறியிருப்பதாவது:
தொழில் வளர்ச்சி , பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் பூமியின் வளங்களை மனிதர்கள் சூறையாடி வருகின்றனர். இதனால் பூமி அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் நமது வருங்கால தலைமுறையினருக்கு நாம் என்ன விட்டுச் செல்லப் போகிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இரண்டு விதமான பிரச்சினைகளை நாம் இப்போது எதிர்கொண்டுள்ளோம். ஒன்று சுற்றுச்சூழல் பாதிப்பு. மற்றொன்று கலாச்சார சீரழிவு. இதில் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகவும் அபாயகரமானது.
தொழில்நுட்பத்தின் உதவி யால் இயற்கை வளங்களை மனிதன் அழித்து கொண்டே வருகிறான். எரிசக்தி தேவைக்காக சுற்றுச்சூழலை சூறையாடுகிறான். இதன் எதிரொலியாக இப்போது அடிக்கடி இயற்கை பேரிடர்கள் நேரிடுகின்றன. இதேநிலை நீடித்தால் இந்த நூற்றாண்டிலேயே நாம் பேரழிவுகளைச் சந்திக்க நேரிடும்.
எனவே அரசியல்வாதிகள் தங்களின் குறுகிய கால பார்வையை தவிர்த்து தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அரசு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
இதேபோல பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனும் அதனைக் காப்பாற்ற புதிய புரட்சியை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.