ரஷ்யாவுக்கான சலுகைகளை பறிக்க ஒபாமா முடிவு

ரஷ்யாவுக்கான சலுகைகளை பறிக்க ஒபாமா முடிவு
Updated on
1 min read

ரஷ்யாவுக்கு அமெரிக்க அரசு வழங்கி வரும் சிறப்பு முன்னுரிமைகள் மற்றும் சலுகைகளை ரத்து செய்ய அமெரிக்க அதிபர் ஒபாமா முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது. பொருளாதார ரீதியாக ரஷ்யா முன்னேறிவிட்டதால், அந்த சலுகையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்திற்கு ஒபாமா அறிவிக்கை அனுப்பி வைத்துள்ளார்.

இந்த சலுகைகளை ரத்து செய்தால், ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வழக்கமான சுங்க வரிகள் விதிக்கப் படும். சலுகை அளிக்கப்பட மாட்டாது.

வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவும் வகையில் முன்னுரிமை அளிக்கும் திட்டத்தை 2012-ம் ஆண்டில் அமெரிக்கா கொண்டு வந்தது. அதன்படி இந்நாடுக ளிலிருந்து 1,990 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருள்கள் சுங்க வரியின்றி அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்பட்டன. இதன் மூலம் அந்நாடுகள் பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ரஷ்யா பொருளாதார ரீதியாக முன்னேறி விட்டதால், அமெரிக்காவின் முன்னுரிமை அளிக்கும் திட்டம் அந்நாட்டுக்குப் பொருந்தாது என கூறப்படுகிறது. அதன்படி அந்நாட்டிற்கு அளிக்கப்பட்ட சலுகை ரத்து செய்யப்படவுள்ளது. சமீபத்தில் தான் அதிக வருமானம் ஈட்டும் நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று என உலக வங்கி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கனடாவும் நடவடிக்கை

ரஷ்யாவிற்கு வழங்கப்பட்டு வந்த இதே போன்ற சலுகைகளை ஏற்கெனவே கனடாவும், ஐரோப்பிய யூனியனும் ரத்து செய்துள்ளதாகவும், அதைத் தொடர்ந்தே அமெரிக்காவும் தற்போது இந்நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகவும் தெரிகிறது.

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் தலையீடு அதிகரித்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த சலுகைப் பறிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in