

பிடல் காஸ்ட்ரோ நாட்டின் நிலைமையைப் புரிந்து கொண்டு தான் அதுவரை நினைத்துக்கூடப் பார்த்திராத பல விஷயங்களில் வளைந்து கொடுக்கத் தொடங்கினார். ஸ்பெயினைச் சேர்ந்தவர்கள் கியூபாவில் ஓட்டல்கள் கட்ட அனுமதி அளித்தார்.
கனடா மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களுக்குச் சில கனிமங்களை எடுத்துக் கொள்ள அனுமதித்தார். ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகியவற்றுடன் வணிகத்தில் ஈடுபட்டார். முதல் முறையாக அங்கு வருமானவரி அறிமுகமானது.
சோவியத் யூனியனின் மானியங்கள் நின்று போனதில் கியூபாவில் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட, நிலைமை மேலும் மோசம் அடைந்தது. இந்த நிலையில் அமெரிக்கா உதவ முன்வந்தது. அதாவது அது கியூபா மீது விதித்திருந்த பொருளாதாரத் தடையை நீக்கிக் கொள்ளவில்லை. ஆனால் உணவு, மருந்து போன்றவற்றை நன்கொடையாக அளிப்பதாகச் சொன்னது. அதை ஏற்றுக் கொள்ள கியூபாவின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. 1993 வரை இந்த மறுப்பு தொடர்ந்தது.
ரஷ்யாவுக்குப் பிறகு கியூபாவுக்கு ஆதரவான நாடுகளாக சீனா, வெனிசுவேலா, பொலிவியா ஆகியவை ஓரளவு விளங்கின. முக்கியமாக வெனிசுவேலாவும், பொலிவியாவும் பெட்ரோல் விஷயத்தில் கியூபாவுக்குக் கை கொடுத்தன.
ஒருகட்டத்தில் காஸ்ட்ரோ தன் அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு ஒரு முக்கிய காரணம் அவரது உடல் நலம்.
ஒருவித செரிமான நோய் எனலாம். பெருங்குடலின் உட்பகுதி தொற்றுகளால் பாதிக்கப்பட்டு அங்கே சிறு சிறு பைகள் போன்ற அமைப்புகள் உருவாகிவிட்டிருந்தன.
இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார் காஸ்ட்ரோ. இந்த அறுவை சிகிச்சை 2006-ல் நடைபெற்றது. இதைச் செய்து கொள்வதற்கு முன் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்து அந்தக் கடமைகளை தம்பி ரால் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.
உலகெங்கும் பரபரப்பு கூடியது. காஸ்ட்ரோவின் உயிருக்கே ஆபத்து என்று சிலர் கூறினார்கள். வேறு சிலரோ `உடல்நலம் சரியில்லை என்பதே பொய். வேறு ஏதோ காரணத்துக்காக இவர் ராஜினாமா செய்கிறார்’ என்றார்கள். தவிர `காஸ்ட்ரோ கடத்தப்பட்டார்’’ என்ற வதந்தியும் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. இதைத் தவிர்ப்பதற்காக வானொலியில் அவர் உரையாற்ற நேர்ந்தது.
பதவியில் இல்லாவிட்டாலும் பல அரசியல் முடிவுகளை காஸ்ட்ரோ எடுத்தார். அவர் விரல் அசைவில்தான் கியூபா அரசு என்ற நிலை தொடர்ந்தது. 2007 பிப்ரவரியில் காஸ்ட்ரோவின் உடல்நலம் முன்னேறி வருகிறது என்ற அறிவிப்பு வந்தது.
அறுவை சிகிச்சை நடைபெற்று ஒருவருடம் கூட முடியாத நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினார். ஹவானாவில் நடைபெற்ற கூட்டு சேரா இயக்க மாநாட்டில் கலந்து கொண்டார்.
அமெரிக்க அரசு தொடர்ந்து காஸ்ட்ரோ வைக் கடுமையாக விமர்சித்து வந்தது. ஒருகட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் `ஒருநாள் இறைவன், காஸ்ட்ரோவை எடுத்துச் செல்வார்’ என்றார்.
இவர் எப்போதுதான் சாகப்போகிறாரோ என்கிற தொனி கொண்ட வாக்கியம்!
கடவுள் நம்பிக்கை இல்லாத, காஸ்ட்ரோ இதற்கு அளித்த பதில் சுவாரசியமானது. “இப்போது புரிகிறது. தானே என்னை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் அமெரிக்க அரசின் அத்தனை கொலை முயற்சிகளிலிருந்தும் என்னைக் கடவுள் காப்பாற்றி இருக்கிறார்’’ என்றார்.
எத்தனை கொலை முயற்சிகள்? 600-க்கும் அதிகம் என்றது காஸ்ட்ரோ தரப்பு. அமெரிக்கா மறுத்தது. விஷயம் சூடு பிடிக்கவே அமெரிக்கப் பாராளுமன்றம் இதற்காக ஒரு குழுவை நியமித்தது. பிராங்க் சர்ச் என்பவர் இந்தக் குழுவின் தலைவர் என்பதால், இந்தக் குழு சர்ச் குழு என்றே அழைக்கப்பட்டது. இதன் கண்டுபிடிப்புகள் அமெரிக்காவுக்கு அப்படி ஒன்றும் ஆதரவானதாக இல்லை.
திட்டமிட்ட படுகொலைகளுக்கு பின்னணியாக இருக்கும் உயரதிகாரிகளை உளவுத்துறையின் கீழ்மட்ட ஊழியர்கள் சிறிதும் காட்டிக் கொடுக்காமல் இருந்ததோடு அவர்களை குற்றச்சாட்டுகளிலிருந்து நழுவச் செய்யும் வகையிலும் செயல்பட்டார்கள் என்றது குழுவின் முடிவு. நிறைய சங்கேத வார்த்தைகள் நிறைந்த தகவல் தொடர்புகள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டன என்றும் கூறியது அந்த அறிக்கை.
1960லிருந்து 1965 வரை காஸ்ட்ரோவை தீர்த்துக் கட்ட அமெரிக்க உளவுத்துறை எட்டு முயற்சிகளைச் செய்தது என்று அறிவித்தது சர்ச் குழு. இதுவே பேரதிர்ச்சியை உண்டாக்கியது. காஸ்ட்ரோவை பாதுகாக்க நியமிக்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரியான ஃபேபியன் எஸ்கலண்டே என்பவர் அமெரிக்க உளவுத்துறை, காஸ்ட்ரோவை கொலை செய்ய 638 முறை முயன்றது என்றார். கியூபா அரசைக் கவிழ்க்க திட்டமிட்ட இந்தக் கொலை முயற்சிகளுக்கு `ஆபரேஷன் மங்கூஸ்’ என்றும் பெயரிடப்பட்டிருந்ததாம்.
கொலை முயற்சி என்றால் துப்பாக்கியோ, கத்தியோ இல்லை. காஸ்ட்ரோ பயன்படுத்திய சிகாரில் விஷம் கலந்தது ஒருவகை. அவர் ஸ்கூபா டைவிங் எனப்படும் விளையாட்டில் ஈடுபடும் பழக்கம் கொண்டவர். இதற்கான அவர் உடையில் விஷக்கிருமிகள் நிரப்பப்பட்டன. அவரது பால்பாயின்ட் பேனாவில் விஷம் நிரம்பிய ஒரு ஊசி இணைக்கப்பட்டது.
பயன்படுத்தும்போது கிட்டத்தட்ட வலியே இல்லாமல் இந்த ஊசி அவர் விரலைக் குத்த, விஷம் உடலில் கலந்து விடும். ஒருகட்டத்தில் அருங்காட்சியகம் ஒன்றுக்கு அவர் செல்லும்போது அவர் காருக்கு வெடி வைக்கும் திட்டமும் தொடங்கப்பட்டது. பலத்த பாதுகாப்பு எச்சரிக்கைகள் காரணமாக இவையெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு, காஸ்ட்ரோவின் உயிர் காப்பாற்றப்பட்டது.
அடுத்ததாக அமெரிக்க உளவுத் துறை தன் கைக்குள் போட்டுக் கொண்டது மரிடா லொரென்ஸ் என்பவரை அவர் காஸ்ட்ரோவின் (முன்னாள்) காதலி!
(உலகம் உருளும்)