Last Updated : 26 Jun, 2015 05:46 PM

 

Published : 26 Jun 2015 05:46 PM
Last Updated : 26 Jun 2015 05:46 PM

உலகப் பொருளாதாரம் பெரும் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்படலாம்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை

1930-களில் ஏற்பட்ட மாபெரும் பொருளாதார நெருக்கடி போன்ற நிலை மீண்டும் ஏற்படலாம் என்று ரிசர்வ் வங்கி அளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.

லண்டன் பிசினஸ் ஸ்கூலின் சர்வதேச பொருளாதார மாநாடு நடந்து வருகிறது. இதில் பேசிய ரகுராம் ராஜன், மத்திய வங்கிகள் போட்டிரீதியாக நிதிக்கொள்கைகளை எளிமையாக்கிக் கொள்வது பற்றி அவர் எச்சரித்தார். ஆனால் இந்தியாவின் சூழ்நிலை வேறு, இங்கு முதலீடுகளை அதிகப்படுத்த வட்டி விகிதங்களை ஓரளவுக்குக் குறைக்க வேண்டியுள்ளது என்றார் ரகுராம் ராஜன்.

இந்நிலையில் உலகப் பொருளாதாரம் 1930-ம் ஆண்டு சந்தித்த நெருக்கடி நிலையை மீண்டும் சந்திக்க வேண்டி வரலாம் என்று எச்சரித்துக் கூறும்போது

"இதற்கு தீர்வு காண சர்வதேச பொருளாதார கலந்துரையாடல் அமைய வேண்டும் என்பது எனது விருப்பம். பொருளாதாரத்தை கணிக்க வேண்டிய உத்தியை மேலும் தேர்ந்த அளவில், புதுப்பித்த நிலைப்பாட்டில் எடுத்து செல்ல வேண்டியுள்ளது. அதாவது மத்திய வங்கி செய்ய வேண்டியவை பற்றி விவாதங்கள் தேவை.

அத்தகைய புதுப்பித்தல், பலகட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகே எட்டப்படும். காலப்போக்கில் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒருமித்த செயல்பாடு இது. தொழில்துறையை சார்ந்த நாடுகள் அல்லது வளர்ந்து வரும் சந்தைகளுக்கு மட்டுமே ஆன நெருக்கடி அல்லாமல் இது சர்வதேச அளவிலான பிரச்சினை.

1930-களில் உலகெங்கிலும் மாபெரும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. தற்போதும் அதே போன்ற சூழல் மீண்டும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அப்படியொரு நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள மத்திய வங்கிகள் அனைத்தும் தயாராக வேண்டும்.

சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒருமித்த கருத்தோடு வருங்கால பொருளாதார சூழலை கட்டமைக்க எண்ண வேண்டும்.

புதுப்பிக்கப்பட முயற்சி துணிவானதாக இருக்க வேண்டியது அவசியம்" என்றார்.

வட்டி விகிதக் குறைப்பை இந்தியப் பார்வையில் எப்படி அணுகுகிறார் என்ற கேள்விக்குப் பதில் அளித்த ரகுராம் ராஜன், “சந்தைகளின் எதிர்வினையை ஒருவாறு கட்டுப்படுத்த முயற்சிக்கிறேன். நாங்கள் (இந்தியா) முதலீடுகளை துரிதப்படுத்தும் நிலையில் இருக்கிறோம், அதனைப்பற்றியே நான் அதிகம் கவலையடைகிறேன்.” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x