உலக மசாலா: பிரிட்னி ஸ்பியர்ஸ் ஆணா?

உலக மசாலா: பிரிட்னி ஸ்பியர்ஸ் ஆணா?
Updated on
1 min read

பிரிட்னி ஸ்பியர்ஸ் போலவே இருக்கும் இந்தப் பெண்ணைப் பார்த்து ஆச்சரியப்படாதவர்களே இல்லை. இவர் பெண் அல்ல, ஆண் என்பது அடுத்த ஆச்சரியம். டெர்ரிக் பேர்ரி என்பவர் பிரிட்னி ஸ்பியர்ஸ் போல வலம் வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டுக்காக பிரிட்னி போன்று உடைகளை அணிந்தார். எல்லோரும் பாராட்டினார்கள். அதற்குப் பிறகு டெர்ரிக்கு, பிரிட்னி உடைகள் மீது அளவுக்கு அதிகமான ஆர்வம் வந்துவிட்டது.

’’பிரிட்னியாக என்னை நினைத்துக்கொள்ளவில்லை. ஆனால் பிரிட்னி போல இருப்பதிலேயே அதிகப் புகழையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறேன். நாடகக் கலைஞரான நான், ஒன்றரை மணி நேரத்தில் பிரிட்னியாக மாறிவிடுவேன். இதற்காக நான் எந்த அறுவை சிகிச்சைகளையும் செய்துகொள்ளவில்லை. பிரிட்னியின் ஆல்பங்களைப் போட்டுப் பார்த்து, என்னை மெருகேற்றிக்கொள்கிறேன். ஒருமுறை என் பாட்டி என்னைப் பார்த்ததும், எல்லோருக்கும் போன் செய்து பிரிட்னி என் அருகில் இருக்கிறார் என்று செய்தி பரப்பிவிட்டார்.

நான்தான் என்பதைப் புரிய வைப்பதற்குள் பெரும்பாடாகிவிட்டது” என்கிறார் டெர்ரிக். லாஸ் வேகாஸில் நடைபெற்ற டெர்ரிக்கின் நிகழ்ச்சிக்கு, பிரிட்னி வந்திருந்தார். மேடையில் டெர்ரிக்கைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் உறைந்து போனார். டெர்ரிக்கு, நிகழ்ச்சிகள் மூலம் வருமானமும் பெருகி வருகிறது.

ஒரிஜினலையே அசர வச்சிட்டீங்களே டெர்ரி!

ஸ்காட்லாந்தில் உள்ள தீவுகளில் ஒன்று கெனா. இங்கே 20 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றன. இவர்களுக்காக ஒரு கடையும் இயங்கி வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தக் கடையில் ஆட்கள் இருப்பதில்லை. இரவு நேரங்களில் கடையைப் பூட்டுவதும் இல்லை. இங்கு விலை குறிப்பிட்டு, பொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. தேவையான பணத்தை வைத்துவிட்டு, பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

ஆனால் கடந்த வெள்ளி இரவு, கடையில் இருந்த கம்பளி குல்லா, இனிப்புகள், பிஸ்கெட் போன்றவை திருடு போய்விட்டன. இந்தச் சம்பவம் தீவுவாசிகளை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. ‘’பொருட்களுக்காக யாரும் வருத்தப்படவில்லை. ஆனால் குற்றம் நடந்துவிட்டதே என்றுதான் கவலையாக இருக்கிறது. 1960ம் ஆண்டு தேவாலயத்தில் ஒரு இரும்புத் தட்டு காணாமல் போயிருக்கிறது. அதற்குப் பிறகு இப்பொழுதுதான் திருட்டைக் கேள்விப்படுகிறேன்” என்கிறார் ஒருவர். அருகில் உள்ள நகரத்தில் இருந்து திருட்டை விசாரிக்க, காவலர்கள் வந்திருக்கிறார்கள்.

யாரோ ஒருவர் இப்படி நம்பிக்கையை வீணாக்கிட்டாரே!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in