

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட இருப்பதாக ஜெப் புஷ் (62) அறிவித்துள்ளார்.
இவர் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தம்பியும், சீனியர் புஷ்ஷின் இரண்டாவது மகனுமாவார்.
ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் ஏற்கெனவே தன்னை வேட்பாளராக அறிவித்துள்ள நிலையில், நேற்று ஜெப் புஷ் கட்சியினர் மத்தியில் தனது விருப்பத்தை தெரிவித்தார்.
குடியரசு, ஜனநாயக கட்சிக்குள் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் தேர்வுக்கான உட்கட்சி தேர்தல் நடக்கும். எனினும் இந்த இருவரும் அதிபர் தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
குடியரசு கட்சியினர் மத்தியில், அதிபர் தேர்தலில் போட்டியிடும் தனக்கான ஆதரவை பலப்படுத்தியுள்ள ஜெப் புஷ், பிரச்சாரத்துக்கு தேவையான நிதியையும் திரட்டி வருகிறார்.
புளோரிடா மாகாணம், மியாமி நகரில் திரண்டிருந்த கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் நேற்று முன்தினம், அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்த அறி விப்பை ஜெப் புஷ் வெளியிட்டார்.
அதிபர் தேர்தலில் ஜெப் வெற்றிபெற்றால், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3-வது நபர் அமெரிக்க அதிபராகும் சாதனையை படைப்பார். ஜெப் புஷ்ஷின் தந்தை ஜாரஜ் எச்.டபிள்யூ. புஷ் அமெரிக்காவின் 41-வது அதிபராக இருந்தார். ஜெப் புஷ்ஷின் அண்ணன் ஜார்ஜ் டபிள்யூ புஷ் அமெரிக்காவின் 43-வது அதிபராக பணியாற்றினார்.
ஜெப் புஷ், புளோரிடா மாகாணத்தின் ஆளுநராக பதவி வகித்தவர். ஜெப் புஷ் தவிர, குடியரசுக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், லூசியாணா மாகாண ஆளுநருமான பாபி ஜிண்டால் ஏற்கெனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, நாடு முழுவதும் கட்சியினரிடையே பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
நியூஜெர்ஸி மாகாண ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டியும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட ஆர்வம் தெரிவித்திருக்கிறார்.