

விடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்புகள் இப்போதும் செயல்படுகின்றன என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
சர்வதேச தீவிரவாதம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் ஆய்வறிக்கை வெளியிடப்படுகிறது. அதன்படி 2014-ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது. அதில் விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் அரசு படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டுப் போர் 2009-ம் ஆண்டில் முடிவடைந்தது. அதன்பிறகு இலங்கையில் விடுதலைப் புலிகள் எவ்வித தாக்குதல்களையும் நடத்தவில்லை. எனினும் அதன் சர்வதேச அமைப்புகள் இப்போதும் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. அந்த அமைப்புகளின் நிதி கொடுக்கல், வாங்கல் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் உள்ள அமெரிக்கா, இஸ்ரேல் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட குற்றச்சாட்டின்பேரில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் 13 பேர் கடந்த 2014-ல் மலேசியாவில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதல்களில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கை முன்னாள் அதிபர் பிரேமதாச உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த குற்றச் சாட்டின்பேரில் 2014-ல் 16 வெளிநாட்டு நிறுவனங் கள் மற்றும் 422 பேருக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.