

கிழக்கு ஆசியா பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களைக் கொண்டு 3-டி சூப்பர் கணினி மாதிரியில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் படி கிழக்கு ஆசிய பகுதிக்கு அடியில் மிகப்பெரிய பாறை அமைப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
2007-2011-ஆம் ஆண்டுகளிடையே இப்பகுதிகளில் ஏற்பட்ட சுமார் 227 நிலநடுக்கங்களின் தாக்கங்களை 3-டி சூப்பர் கணினி மாதிரி உருவாக்கங்களைக் கொண்டு தரவு சேகரிக்கப்பட்டது.
ரைஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மின் சென் என்ற விஞ்ஞானியின் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் மூலம் திபெத்திய பீடபூமிக்கு கீழே மோதி அடியில் சென்ற கண்டத் தட்டுக்கள் பற்றி புதிய வெளிச்சம் கிடைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
உலகின் கூரை என்று அழைக்கப்படும் திபெத் பீடபூமி கடல் மட்டத்திலிருந்து சுமார் 5 கிமீ உயரத்தில் இருப்பது எப்படி என்ற புதிருக்கும் விடை கிடைக்க வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
திபெத்திய பீடபூமியில் கண்டத்தட்டுக்கள் மோதிக்கொள்வதால்தான் பேரழிவு பூகம்பங்கள் ஏற்படுகின்றன. நேபாளத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்திற்கும் இது காரணமாக அமைந்திருக்கக் கூடும் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.
மேலும், ஹைட்ரோகார்பன் ஆதாரங்களும், கிழக்கு ஆசியாவுக்குக் கீழ் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும் ஓரளவுக்கு கணிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
நீரில் கல்லை விட்டெறிந்தால் ஏற்படும் நீரலைகள் போலதான் நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு வெளிப்படும் ஆற்றல் பரவுகிறது. இந்த அலைகள் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு மிக வேகமாக பரவி தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.
நிலநடுக்க ஆற்றல் அலைகள் அவ்வாறு செல்லும் போது, அடியில் உள்ள பாறை அமைப்புகள் மற்றும் வெப்பநிலை பொறுத்து வேகம் கூட்டவோ, குறைக்கவோ செய்யும்.
தற்போது விஞ்ஞானிகள் ஆற்றல் அலைகளில் ஏற்படும் இந்த வேக மாற்றங்களை கணக்கில் கொண்டு பூமிக்கு அடியில் இருக்கும் பாறைகளின் இயற்பியலை ஆய்வாளர்கள் ஓரளவுக்குக் கணித்துள்ளனர்.
இது குறித்து இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய மின் சென் கூறும் போது, “இந்த ஆய்வின் மூலம் திபெத்திய பீடபூமிக்கு அடியில், உலகின் மிகப்பெரிய, மிக உயரமான பீடபூமி இருப்பதை கண்டுபிடித்துள்ளோம். அதாவது அதிக இயக்க வேகமுடைய பெரும்பாலும் செங்குத்தாக உள்ள பாறை அமைப்பு ஒன்று பூமியின் அடியாழம் வரை காணப்படுகிறது. அதாவது 660கிமீ ஆழத்தில் இதன் அடிபாகம் இருப்பதாகக் கொள்ளலாம்” என்றார்.
இதன் மூலம் மற்றொரு பிளேட்டின் கீழ் சென்ற கடல் தாங்கும் தட்டுக்கள் மற்றும் கண்டத்தட்டுக்களின் செயல்பாடுகளையும் இந்திய கண்டத் தட்டின் நிலவரங்களையும் எதிர்காலத்தில் அறிய முடியும் என்கிறது இந்த ஆய்வு.
இது சாலிட் எர்த் என்ற புவி இயற்பியல் ஆய்வு இதழில் வெளியாகியுள்ளது.