Published : 09 May 2015 08:51 AM
Last Updated : 09 May 2015 08:51 AM

சிங்கப்பூரில் இந்திய மையத்தை திறந்துவைத்தார் பிரதமர் லீ சீன் லூங்: ஒரு மாத காலத்துக்கு கொண்டாட்டங்கள்

சிங்கப்பூரில் அரிய கலைப் பொருட் களுடன் கூடிய இந்திய பாரம்பரிய மையத்தை அந்நாட்டு பிரதமர் லீ சீன் லூங் நேற்று முன்தினம் திறந்துவைத்தார். இதையொட்டி ஒருமாத காலத்துக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய கலாச்சாரம், வரலாறு, பாரம்பரியம் மற்றும் சிங்கப்பூர் இந்தியா இடையிலான நீண்டகால நல்லுறவு ஆகியவற்றை சித்தரிக்கும் வகையில் அரிய சிற்பங்கள், காட்சிப் பொருட்களைக் கொண்ட இந்திய பாரம்பரிய மையத்தை சிங்கப்பூரில் அந்நாட்டு அரசு அமைத்துள்ளது. இதை சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் நேற்று முன்தினம் மாலை திறந்துவைத்தார்.

தென்கிழக்கு ஆசியாவிலேயே, இந்திய சமுதாயத்தின் பன்முக பாரம் பரியத்தை பிரதிபலிக்கும் முதல் காட்சிக்கூடம் இது என்பது குறிப்பிடத் தக்கது. சிறந்த கட்டிடக் கலைக்குச் சான்றாக அமைந்துள்ள இந்த 4 மாடி காட்சிக்கூடம், சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் அமைக்கப்பட் டுள்ளது. இங்கு 5 நிரந்தர கூடங்கள், சிறப்பு கண்காட்சிக் கூடம் ஆகியவற் றோடு, பார்வையாளர்களின் வசதிக் காக கல்வி மற்றும் இதர நடவடிக் கைகளுக்கான பகுதியும் ஒதுக்கப் பட்டுள்ளது.

சிங்கப்பூர் அரசால் அமைக்கப்பட் டுள்ள இந்திய பாரம்பரிய மையத்தை அந்நாட்டின் தேசிய பாரம்பரிய வாரியம் நிர்வகிக்கிறது. இக்காட்சிக் கூடத்தின் கட்டுமானம் தொடங்கு வதற்கு முன்பாகவே, 2008-ல் இருந்து இந்திய இசை, பாரம்பரியம், கலாச்சாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவந்தன.

இந்தியத் தலைவர்களின் சிலைகள்

இக்காட்சிக்கூடத்தில், தற்போது 443 அரிய பொருட்கள் இடம்பெற்றுள் ளன. 5 ஆயிரம் நுணுக்கமான வேலைப் பாடுகளுடன் கூடிய செட்டிநாட்டு கதவு, இஸ்லாமிய வேலைப்பாடுடன் கூடிய பாகிஸ்தானின் முல்தான் பகுதியில் உருவாக்கப்பட்ட முகப்பு போன்றவை சிறப்பம்சங்கள். காந்தி, நேரு, நேதாஜி, தாகூரின் மார்பளவுச் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.

இக்காட்சிக்கூட திறப்பு விழாவை முன்னிட்டு, மே மாதம் முழுவதும் அனைவரும் கட்டணமின்றி அனுமதிக் கப்படுகின்றனர். சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களின் வாழ்க்கைமுறை பற்றியும், இம்மையத்தைப் பற்றியும் விளக்கும் வகையில் ஒருமாத காலத்துக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோலம் போடலாம்

மேலும், ‘கலைடாஸ்கோப்’ என்னும் தலைப்பில், இந்தியாவின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்குப் பிராந்தியங்களின் தற்கால மற்றும் பாரம்பரிய நிகழ்வுகள் தொடர்பான நிகழ்ச்சிகளை, உள்ளூரைச் சேர்ந்த குமார் போன்ற கலைஞர்கள் நடத்து கின்றனர். கோலம் போட்டுப் பார்ப்பது, இந்திய கிராமிய நடனங்களை ஆடிப் பார்ப்பது ஆகியவற்றில் பார்வை யாளர்களை ஈடுபடவைக்கும் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சங்கர் மகாதேவனின் நிகழ்ச்சி

துவக்க விழாவின் ஒரு பகுதியாக, பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் பங்கேற்ற இசை நிகழ்ச்சி ரசிகர்களைப் பெரிதும் மகிழ்வித்தது. ‘கலைடாஸ்கோப் இந்திய இசைப் பாரம்பரியம்’ என்ற பெயரிலான அந்த நிகழ்ச்சியில் தனது பிரபல பாடல்களைக்கூட பாடாமல், முழுக்க முழுக்க நாட்டுப்புறப் பாடல்களை மட்டுமே அவர் பாடியது மிகவும் ரசிக்கும்படி இருந்தது.

இந்திய பாரம்பரிய மையமும் ஆர்ட் காம்பஸும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சி நாட்டுப்புற இசை வடிவங்களையும் அவற்றை உள்வாங்கிய கர்னாடக இசையின் ஒரு பகுதியையும் வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்தது. சிங்கப்பூரிலேயே வசிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியச் சமூகத்தவரின் ரசனைக்கு ஏற்ப பாடல்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர் களாக வந்திருந்த பிரமுகர்களில் சிங்கப்பூர் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் (பிரதமர் அலுவலகம், உள்துறை, தொழில், வர்த்தகத் துறை) இந்திய பாரம்பரிய மையத் தின் வழிகாட்டுகுழு உறுப்பினர்கள், கோபிநாத் பிள்ளை, ஆர்.ஜெயச் சந்திரன் ஆகியோரும் அடங்குவர்.

மராத்திய நாட்டுப்புற நாடகக் கலையில் டாக்டர் பட்டம் வாங்கிய பேராசிரியர் கணேஷ் எஸ்.சந்தன் ஷிவே, கண்ணைப் பறிக்கும் வெண்ணிற ஆடையில் மேடையில் அட்டகாசமாகத் தோன்றினார். அற்புதமான தாளகதியுடன் உள்ளத்தை உருக்கவைக்கும் இசையை அவர் வழங்கத் தொடங்கியபோதே நிகழ்ச்சி களைகட்டிவிட்டது.

இடைவேளையே இல்லாமல் மாபெரும் தொடர் நிகழ்ச்சியாக அது அமைந்திருந்தது. உலகம் முழுக்க நேரடியாக இசை நிகழ்ச்சிகளை வழங்கி லட்சக்கணக்கான ரசிகர்களைக் கட்டிப்போட்ட சங்கர் மகாதேவன் தன் இசைஅமைப்புத் திறனையும் பாடும் திறனையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினார். 2009-ல் வெளியான ‘லக் பை சான்ஸ்’ இந்தி திரைப்படத்தில் இருந்து ‘பாவ்ரே’ என்ற பாடல் உள்ளிட்ட பல பாடல்களும் ரசிகர்களைத் தாளம்போட்டு ஆடவும் வைத்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x