பாஸ்டன் மாரத்தான் ஓட்டத்தில் குண்டு வீசிய பயங்கரவாதிக்கு மரண தண்டனை

பாஸ்டன் மாரத்தான் ஓட்டத்தில் குண்டு வீசிய பயங்கரவாதிக்கு மரண தண்டனை
Updated on
1 min read

ஏப்ரல் 15, 2013-ல் அமெரிக்காவில் உள்ள பாஸ்டனில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தின் போது 2 பிரஷர்-குக்கர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்த பயங்கரவாதி ஸோகார் சர்னயேவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகி, சுமார் 260 பேர் படுகாயமடைந்தனர். 9/11 காலக்கட்டத்துக்குப் பிறகு மரண தண்டனை பெறும் முதல் பயங்கரவாதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

21 வயது சர்னயேவ் கையை கட்டியபடியே நின்று கொண்டிருந்தார். தீர்ப்பை வாசிக்கும் போது அவரது தலை கவிழ்ந்திருந்தது. 20 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த ஒக்லஹாமா நகர் குண்டு வெடிப்பு வழக்குக்குப் பிறகு இந்த வழக்கு விசாரணை அமெரிக்காவில் மிகவும் நெருக்கமாக கவனிக்கப்பட்டு வந்தது.

வழக்கை விசாரித்த 12 ஜூரிக்கள் குழு ஒட்டுமொத்தமாக இவருக்கு மரண தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்ற ஒரே நிலைப்பாட்டை எடுத்தனர்.

இவர் மீது 30 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 17 குற்றச்சாட்டுகள் மரண தண்டனைக்குரியவை என்பது குறிப்பிடத்தக்கது.

சர்னயேவுக்காக வாதாடிய வழக்கறிஞர் குண்டு வீச்சின் போது அவருக்கு19 வயதுதான் என்றும் 26 வயது மூத்த சகோதரரின் தூண்டுதலின் பேரில் இவர் செயல்பட்டதாகவும் எனவே மரண தண்டனை அளிக்க வேண்டாம் என்று வாதாடினார்.

இவரது சகோதரர் தாமர்லான் முஸ்லிம் நாடுகளில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் போர்களுக்காக அமெரிக்காவை தண்டிக்க வேண்டும் என்று கூறிவந்தார்.

ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர்களோ, சர்னயேவுக்கு எதிராக கடுமையான வாதங்களை முன்வைத்தனர். அதாவது இவரை பிடிக்கும் போது இவர் எழுதிய வாசகம் ஒன்றை மேற்கோள் காட்டினர், அதாவது, "எங்கள் அப்பாவி மக்களை கொல்வதை நிறுதுங்கள், நாங்களும் நிறுத்துகிறோம்" சர்னயேவ் எழுதி வைத்திருந்த வாசகத்தை அவர்கள் சுட்டிக் காட்டி, சர்னயேவ் இன்னமும் மாறவேயில்லை என்று வாதிட்டனர்.

இவரது அண்ணன் தாமர்லான் சர்னயேவ் அன்றைய தினத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

இந்நிலையில் 21 வயது ஸோக்கார் சர்னயேவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஊசிமருந்து செலுத்தி இவரது மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in