மீண்டும் பிரிட்டன் பிரதமர் ஆகிறார் டேவிட் கேமரூன்

மீண்டும் பிரிட்டன் பிரதமர் ஆகிறார் டேவிட் கேமரூன்
Updated on
1 min read

பிரிட்டன் பொதுத் தேர்தலில் ஆளும் கன்வர்வேட்டிவ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் இரண்டாவது முறையாக மீண்டும் அந்த நாட்டின் பிரதமர் ஆகிறார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தின் 650 இடங்களுக்கு கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் நள்ளிரவுமுதல் வெளியாகத் தொடங்கியது. வெள்ளிக்கிழமை மதியம் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.

மாலை நிலவரப்படி கன்சர்வேட்டிவ் கட்சி 329 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆட்சி அமைக்க 326 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அதன்படி பெரும்பான்மை பலத்தை ஆளும் கட்சி பெற்றுள்ளது.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் விட்னி தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் கூறியபோது, இது தித்திப்பான வெற்றி, 1987, 1992, 2000-ம் ஆண்டுகளில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றிவாகை சூடியது போன்று இப்போதும் அபார வெற்றி பெற்றுள்ளது, இப்போதைய பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தொழிலாளர் கட்சிக்கு 233

முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 233 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்தக் கட்சியின் தலைவரும் பிரதமர் வேட்பாளருமான எட் மிலிபேண்ட், வடக்கு டான்காஸ்டர் தொகுதியில் வெற்றி பெற்றார். கட்சியின் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலக அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியுடன் கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றிருந்த லிபரல் டெகாகரடிக் கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது. அந்தக் கட்சி கடந்த தேர்தலில் 57 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தமுறை அந்தக் கட்சிக்கு 8 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

ஸ்காட்லாந்தில் உள்ள 59 தொகுதிகளில் தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி வரும் எஸ்.என்.பி. கட்சி 56 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.

எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைப்பது கடினம் என்று கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் கன்சர்வேட்டிவ் கட்சி அமோக வெற்றி பெற்றிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in