

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதிக்கு சமீபத்தில் பிறந்த பெண் குழந்தையின் மதிப்பு 80 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ.700 கோடி) என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாதம் 2ம் தேதி வில்லியம்-கேட் தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அதன் நினைவாக, தற்போது பிரிட்டனில் அந்தக் குழந்தையின் படம் பொறித்த தேநீர் கோப்பைகள், டி-ஷர்ட்டுகள், கைக்குட்டைகள் போன்ற பொருட்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது.
இதன் மூலம் சுமார் ரூ.700 கோடிக்கு வணிகம் நடைபெறும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் அந்தக் குழந்தை தனது 10 வயதை அடைவதற்கு முன்பு சுமார் ஒரு பில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ.9,600 கோடி) அளவுக்கு இந்த வணிகம் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இத்தம்பதியின் முதல் குழந்தையான குட்டி இளவரசர் ஜார்ஜ் 2013ம் ஆண்டு பிறந்தபோது, அவரின் மதிப்பு அந்த ஆண்டில் சுமார் 247 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி) இருந்தது. விரைவில், குட்டி இளவரசி தனது சகோதரரின் சாதனையை மிஞ்சிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேஷன் ஆலோசகரான பட்ரீசியா டேவிட்சன் கூறும்போது, "குட்டி இளவரசி என்ன வகையான ஆடைகளை உடுத்துகிறார் என்று உலகமே கண்காணிக்கும். அவர் உடுத்தும் உடைகளைத்தான் பெரும்பாலானவர்கள் பின்பற்று வார்கள்.
ஆக, குட்டி இளவரசரைக் காட்டிலும் குட்டி இளவரசியால் பிரிட்டன் பொருளாதாரத்தில் அதிக அளவு தாக்கம் ஏற்படலாம்" என்றார்.