Published : 22 May 2015 10:53 AM
Last Updated : 22 May 2015 10:53 AM

உலக மசாலா: இரும்பு மீன் சமையல்

கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானி கிறிஸ்டோபர் சார்லஸ். 6 ஆண்டுகளுக்கு முன்பு கம்போடிய மக்களை ஆராய்ச்சி செய்தபோது, அவர்கள் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர்களின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார். ஆனால் அந்த ஏழை மக்களால் இரும்புச் சத்து மிக்க உணவுப் பொருட்களை வாங்கிச் சாப்பிட இயலாது. சத்தான மாத்திரைகளையும் வாங்க முடியாது. இரும்புப் பாத்திரங்களில் சமைப்பதும் கூட முடியாத விஷயமாக இருந்தது.

கிறிஸ்டோபர் யோசித்து, இரும்புக் குண்டுகளை உருவாக்கினார். சமைக்கும்போது, தண்ணீரைக் கொதிக்க வைக்கும்போது இந்த இரும்புக் குண்டைப் போட்டு விட வேண்டும். 10 நிமிடங்களுக்குப் பிறகு எடுத்துவிட வேண்டும். தேவையான இரும்புச் சத்து உணவில் சேர்ந்துவிடும் என்றார். ஓர் இரும்புக் குண்டைப் போட்டுச் சமையல் செய்வதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரும்புக் குண்டை தாமரை வடிவமாக மாற்றிச் சமைக்கச் சொன்னார். அதையும் மக்கள் ஏற்கவில்லை. இறுதியில் மக்களின் கலாசாரத்தைப் படித்தார். மீன் அவர்களின் அதிர்ஷ்டச் சின்னம். அதனால் இரும்பால் ஆன மீனைச் செய்து கொடுத்தார்.

மக்கள் மகிழ்ச்சியோடு சமையலில் இரும்பு மீனைச் சேர்த்துக்கொண்டனர். இரும்பு மீனால் சமைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட்டவர்களை ஓராண்டுக்குப் பிறகு சோதனை செய்து பார்த்ததில் பல நூற்றுக்கணக்கான மக்கள் ரத்தச்சோகையில் இருந்து மீண்டது தெரியவந்தது. மருத்துவமனைகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் மூலம் இரும்பு மீன்கள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

ரத்தச்சோகை மட்டுமில்லை, காய்ச்சல், தலைவலி கூட இப்பொழுது வருவதில்லை என்கிறார்கள் பெண்கள். கம்போடியாவில் வெற்றி பெற்ற இரும்பு மீன் திட்டத்தை வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் செயல்படுத்த இருக்கிறார்கள். “எவ்வளவுதான் பிரமாதமான சிகிச்சைகள் இருந்தாலும் மக்கள் அதைப் பயன்படுத்தவில்லை என்றால் அவற்றால் பலன் ஒன்றும் இல்லை. எந்த விஷயமும் எல்லா மக்களுக்கும் பயன் அளிக்கும் விதத்தில் கொண்டுவர வேண்டும்’’ என்கிறார் கிறிஸ்டோபர்.

அடடா! உலக நாடுகள் அனைத்துமே கிறிஸ்டோபர் யோசனையை அமல்படுத்தலாமே…

சீனாவின் சிச்சுவான் மருத்துவமனைக்குக் கடுமையான வயிற்று வலியுடன் வந்தார் லியு. ஆரம்பக்கட்ட பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரை மருத்துவமனையில் தங்கச் சொன்னார்கள். 6 நாட்கள் சிடி ஸ்கேன், எக்ஸ்ரே என்று ஏராளமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்குள் 41 ஆயிரம் ரூபாய் லியுக்குச் செலவாகிவிட்டது. ஆறாவது நாள் அவரிடம் மருத்துவ ரிப்போர்ட் அளிக்கப்பட்டு, வீட்டுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.

ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்த லியு, அதிர்ந்து போனார். `3 மாத கர்ப்பம்’ என்று ரிப்போர்ட் எழுதப்பட்டு மருத்துவர், மருத்துவக் குழு தலைவர், சூப்பர்வைஸர் அனைவரும் கையெழுத்திட்டிருந்தனர். லியு புகார் கொடுத்தார். மருத்துவமனை மன்னிப்புக் கோரியிருக்கிறது. லியுவைப் பரிசோதித்த மருத்துவரை தற்காலிக பணி நீக்கம் செய்திருக்கிறது. லியுவுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கியிருக்கிறது. மருத்துவமனையின் தரத்தைப் பரிசோதிக்க அரசாங்கம் ஓர் ஆராய்ச்சிக் குழுவை அனுப்பி வைத்திருக்கிறது.

அடக்கொடுமையே…

அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடாவில் லிகோலாண்ட் என்ற தங்கும் விடுதி திறக்கப்பட்டிருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவரவருக்கு ஒரு கனவு இல்லம் இருக்கும். அந்தக் கனவு இல்லத்தை உங்கள் விருப்பப்படி நீங்களே இந்த விடுதியில் உருவாக்கிக்கொள்ள முடியும். பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் விடுதியில் ஆங்காங்கே பல வண்ண பிளாஸ்டிக் ப்ளாக்குகள், பொம்மைகள், அலங்காரப் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

தங்கும் அறை, குளியலறை, உணவறை, நீச்சல் குளம் என்று எங்கு வேண்டுமானாலும் உங்கள் விருப்பம் போல அலங்காரம் செய்துகொள்ளலாம். விடுதியை விட்டுக் கிளம்பும்போது, அவற்றை எல்லாம் பெட்டியில் போட்டுவிட்டுச் சென்றுவிடவேண்டும். அடுத்து யாராவது வந்து அவர்கள் கனவு இல்லைத்தை உருவாக்கிக்கொள்வார்கள். இங்கே வரும் பெரியவர்களும் சிறியவர்களும் அத்தனை மகிழ்ச்சியோடு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

குழந்தைகள் விளையாடும் பில்டிங் செட்டைக் கொஞ்சம் பெரிய அளவில் வச்சிட்டாங்க!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x