

நேபாளத்தின் வட-மேற்கு மலைப்பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவினால் நதியின் போக்கு தடைபட அதன் நீர்மட்டம் விறுவிறுவென அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மியாகுடி மாவட்ட கிராமம் ஒன்றில் பதற்றம் ஏற்பட ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
நேற்று நள்ளிரவு ஏற்பட்ட இந்த மிகப்பெரிய நிலச்சரிவு நிறைய சேறு, சகதிகளையும் பெரும்பாறைகளையும் காலிகந்தகி நதியில் கொண்டு வந்து கொட்டி அதன் போக்கை மறித்துள்ளது. இதனால் பெரு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த நதியின் நீர்மட்டம் 150 மீட்டர் அதிகரித்துள்ளதாக உள்ளூர் அரசு அதிகாரி யாம் பகதூர் சோகல் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் 100 பேரை மீட்டுள்ளோம். ஆனால் மற்ற கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் தாங்களாகவே வெளியேறிவிட்டனர்” என்றார்.
மற்றொரு அதிகாரியான திரிவிக்ரம் சர்மா கூறும் போது, "2 மிகப்பெரிய நிலநடுக்கங்களுக்குப் பிறகே நிறைய நிலச்சரிவுகள் ஏற்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். ஆனால் நேற்று இரவு பெரிய மலை ஒன்று உருண்டு வந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.” என்றார்.
நதியில் நிலச்சரிவினால் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தடுப்பை அகற்ற ராணுவ ஹெலிகாப்டரில் வீரர்களும், நிபுணர்களும் மீட்புப் பணிக்காகச் சென்றுள்ளனர்.
இந்த நதி சீன-நேபாள எல்லையில் தொடங்கி வட இந்தியா வழியாக கங்கை நதியுடன் இணையும் நதி என்பது குறிப்பிடத்தக்கது.