Published : 30 May 2015 12:15 PM
Last Updated : 30 May 2015 12:15 PM

ஜிம்பாப்வே கிரிக்கெட் போட்டி நடைபெற்ற லாகூர் மைதானம் அருகே குண்டு வெடிப்பு: தற்கொலைப் படை தாக்குதல் என பாகிஸ்தான் ஒப்புதல்

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாஃபி மைதானம் அருகே நேற்று முன்தினம் தற்கொலைப் படை தாக்குதல் நடந்ததை அந்நாட்டு செய்தித்துறை அமைச்சர் பர்வைஸ் ரஷீத் ஒப்புக்கொண்டுள்ளார்.

கடாஃபி மைதானத்தில் நேற்று முன்தினம் பாகிஸ்தான்-ஜிம்பாப்வே இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்தது. அப்போது இரவு 9 மணியளவில் குண்டுவெடித்தது போன்று பலத்த சப்தம் கேட்டது. அதை மைதானத்தில் இருந்த அனைவருமே உணர்ந்தனர். ஆரம்பத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததாகக் கூறப்பட்ட நிலையில், பின்னர் ஆட்டோவில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்ததாகக் கூறப்பட்டது.

ஆனால் இப்போது அது தற்கொலைப் படை தாக்குதல் என்பதை உறுதிப்படுத்தப் படுத்தியுள்ளார் பாகிஸ்தான் அமைச்சர் ரஷீத். இந்தத் தாக்குதலில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட இருவர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமான பொதுமக்கள் காயமடைந்தனர். மக்களிடையே பீதி ஏற்படாமல் இருக்கவே, டிரான்ஸ்பார்மர் வெடித்ததாக ஆரம்பத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக ரஷீத் கூறுகையில், “மைதானத் தின் மீது தாக்குதல் நடத்த பயங்கர வாதிகள் எடுத்த முயற்சியை போலீஸார் முறியடித்துவிட்டனர். தாக்குதல் நடத்த வந்தவரை தடுத்து நிறுத்திய போலீஸ் அதிகாரி குண்டுவெடித்ததில் உயிரிழந்துவிட்டார்” என்றார்.

ஆனால் லாகூரைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி அமீன் வெய்ன்ஸ், “மைதானம் அருகே நிகழ்ந்த தாக்குதல் எப்படிப்பட்டது என்பதை உறுதி செய்யும் நிலையில் நான் இல்லை. தற்போதைய நிலையில் அது தற்கொலைப் படை தாக்குதலா அல்லது சிலிண்டர் வெடித்ததா என்பதை உறுதி செய்ய முடியவில்லை. தாக்குதல் நிகழ்ந்த இடத்தில் கிடைத்த அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர் ரத்து இல்லை

மைதானம் அருகே குண்டுவெடித்ததால் பதற்றம் நிலவி வந்தாலும், பாகிஸ்தான்-ஜிம்பாப்வே இடையிலான தொடர் திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இடையிலான கூட்டத்துக்கு பின்பே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. ஜிம்பாப்வே வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதல் காரணமாக அங்கு சென்று விளையாட உலகின் அனைத்து அணிகளும் மறுத்து வந்த நிலையில், கடந்த 2009-ல் இலங்கை அணி அங்கு விளையாட சென்றது. இலங்கை வீரர்கள் ஹோட்டலில் இருந்து மைதானத்துக்கு சென்றபோது, அவர்கள் சென்ற பஸ்ஸை வழிமறித்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

அதன்பிறகு கடந்த 6 ஆண்டுகளாக அங்கு எந்த அணியும் செல்லவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கடுமையான முயற்சியால் ஜிம்பாப்வே அங்கு விளையாட சென்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தற்கொலைப் படை தாக்குதல் நடந்துள்ளது. இந்த புதிய தாக்குதலால் பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் நடைபெறும் வாய்ப்பு மீண்டும் மங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x